டிசம்பர் 26, 1392இல் ஸ்பெயின் நாட்டில் உள்ள மோன்காதா என்ற ஊரில் ஒரு புதுமை நடந்தது (Moncada Spain). 1378 ஆம் ஆண்டு திருச்சபை வரலாற்றிலேயே மிகவும் குழப்பமான துக்கமான ஆண்டு.
ஏப்ரல் 18, 1378ஆம் ஆண்டில் ஆறாம் உர்பான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், பிரெஞ்சு நாட்டு கர்தினால்மார்கள் அவரைத் திருத்தந்தையாக ஏற்க மறுத்து, செப். 20, 1378இல் ஏழாம் கிளமெண்டு (ANTI-POPE) என்ற மற்றொரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுத்தனர்.
பிரிவினைக்காரர்கள் உரோமை நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்ற முயற்சித்தனர். ஆனால், அது தோல்வியுற்றது.
இந்தக் குழப்பமான நிலையிலே ஏழாம் கிளமெண்டு மேசன் ஜெய்ம் காரோஸ் என்ற குருவைத் திருநிலைப்படுத்தினார்.
இவர் (ANTI-POPE) ஏழாம் கிளமெண்டால் திருநிலைப்படுத்தியதால், அவர் கொடுக்கும் அருட்சாதனங்கள், குறிப்பாகத் திருப்பலியில் செல்லும்படியாகுமா என்ற சந்தேகம் அருட்திரு மேசன் ஜெய்ம் காரோசுக்கு ஏற்பட்டது.
1392 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று அருட்திரு மேசன் ஜேய்ம் காரோஸ் திருப்பலி நிறைவேற்றியபோது, மேட்டுக்குடி ஆன்சூலா ஆல்பிகாட் என்ற பெண், தன் 5 வயது சிறுமி இன்னஸ் (பின்பு புனித இன்னஸ்) உடன் திருப்பலியில் கலந்து கொண்டனர்.
குரு வசீகரம் செய்த இயேசுவின் திருஉடலை உயர்த்திப் பிடித்த போது, சிறுமி இன்னஸ், குருவின் கையில் குழந்தை இயேசு இருப்பதைக் கண்டு மிக்க மகிழ்ச்சியுற்றார்.
திருப்பலி முடிந்ததும் இன்னஸ் கோயிலை விட்டுப் போக மறுத்துவிட்டாள். தன் தாயிடம் அந்த அழகான குழந்தை இயேசுவோடு விளையாட வேண்டும் என்று அடம் பிடித்தாள்.
ஆகவே, மறுநாள் டிசம்பர் 26, 1392ஆம் ஆண்டு ஆஞ்சுலா அல்பிகாட், தன் மகள் இன்னசுடன் திருப்பலியில் கலந்து கொண்டார். அன்றும் இன்னஸ் குருவின் கரங்களில் குழந்தை இயேசு இருப்பதைக் கண்டாள்.
பூசை முடிந்ததும் அந்தக் குழந்தை இயேசுவோடு விளையாட அனுமதிக்கும் படி தாயிடம் கேட்டாள். ஆஞ்சலா குருவிடம் தன் மகள் இன்னஸ் கண்ட காட்சியைப் பற்றி எடுத்துரைத்தாள்.
குரு அவளிடம் பல கேள்விகளைக் கேட்டார். அனைத்திற்கும் சிறுமி பதில் சொன்னாள். ஆகவே குரு மறுநாள் ஒரு பரிசோதனை செய்ய முடிவு செய்தார். மறுநாள் ஆஞ்சலாவும், வந்தார்கள்.
குரு வசீகரம் பண்ணுவதற்காக இரண்டு பெரிய ஓஸ்திகளை பீடத்தில் வைத்திருந்தார். வசீகரம் செய்யும்போது. ஒரு ஓஸ்தியை மட்டும், "இது என் சரீரம்” என்ற வார்த்தையை உச்சரித்து அப்பத்தை உயர்த்திப் பிடித்தார். இன்னஸ் குழந்தை இயேசுவைக் கண்டு எல்லை இல்லா மகிழ்ச்சியுற்றாள்.
குரு சாதாரண அப்பத்தையும் உயர்த்திப் பிடித்தார். திருப்பலி முடிந்ததும், இன்னசிடம் “எப்போது இயேசுவை நீ கண்டாய்?" என்று கேட்டார்.
"முதல் எழுந்தேற்றத்தின் போது, நான் இயேசுவைக் கண்டேன்”. 'இரண்டாவது எழுந் தேற்றத்தில் நீ என்ன பார்த்தாய்?" என்று குரு கேட்டார். “நான் ஒரு ஓஸ்தியை தான் பார்த்தேன் என்றாள்.
அன்றே அருட்திரு மேசன் ஜேய்ம் காரோசுக்கு தன் குருப்பட்டம் செல்லுமா, செல்லாதா என்ற சந்தேகம் அவரை விட்டு நீங்கிற்று.