பழைய பாஸ்காவும், புதிய பாஸ்காவும்

எகிப்தினின்று யூதர்கள் பார்வோன் பேரரசனின் கொடுங்கோல் ஆட்சியின் அடிமைதனத்திலிருந்து யூதர்களின் வழிபாட்டு மையமாக கொண்டாடப் பெற்ற யூதர்களின் பாஸ்கா பிற்காலத்தில் நிகழப்போகும் மகத்தான புதிய பாஸ்கா நற்கருணையைச் சுட்டிக்காட்டியது. 

முன்னது ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்கு மட்டும் நிகழ்ந்த பாஸ்கா பின்னது உலக மாந்தர் அனைவருக்காகவும் நிகழப்போகும் கிறிஸ்துவின் பாஸ்கா. இயேசுவை முன்அறிவித்த திருமுழுக்கு யோவான் இதோ உலகின் பாவங்களை போக்கும் இறைவனின் செம்மறி என்றார். (யோவா. 1:29) 

திருவெளிப்பாடு முழுவதிலும் உலக மீட்பர் இயேசு கிறிஸ்துவை செம்மறி என்றே குறிப்பிடுகிறது. புதிய பாஸ்காவைக் கொண்டாடும்முன் இயேசு தம் சீடர்களைப் பார்த்து, " உங்களோடு இப்பாஸ்கா விருந்தை உண்பதற்கு மிக மிக ஆவலாய் இருந்தேன்". (லூக். 22:15) என்றார். 

பழைய பாஸ்காவை தாம் கடைசி முறை கொண்டாடும் அதே நேரத்தில் தம்முடைய புதிய பாஸ்காவை ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஏற்பாடு செய்யச் சொன்னார். (லூக். 22:15) 

பழைய பாஸ்கா பலி எதையெல்லாம் குறிப்பாக உணர்த்தியதோ அதை எல்லாம் இப்புதிய பாஸ்காவாகிய கிறிஸ்து உண்மையாகவே நிறைவேற்றினார். 

எனவேதான் "திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ அழிக்க வந்தேன் என்று நினைக்க வேண்டாம். அழிப்பதற்கன்று நிறைவேற்றுவதற்கே வந்தேன்," என்று இயேசு கூறினார். (மத். 5:17).