அருள்தந்தை அ. ஜோ. மாத்யூ கப்புச்சின்,
FATHIMA CHURCH
SHANTHI ASHRAM
4th Street Extension, Gandhipuram,
Coimbatore - 641 012, India.
Phone: 0422-2529159, 2525237
www.fatimachurchgandhipuramcoimbatore.com
மறைக்கல்வி ஆண்டை சிறப்பிக்கும் வகையில் "நற்கருணைப் புதுமைகள் என்ற நூலைப் படைத்தளித்த படைப்பாளர் அருட்திரு. ஜோனத்தன் அவர்களை நன்றியுடன் பாராட்டுகிறேன்.
இந்நூல் நற்கருணை நாதரின் இரக்கத்தையும் மகத்துவத்தையும் பறைசாற்றுகின்றது. இவ்வுலக வாழ்விலே மக்கள் அமைதியுடன் வாழ வழிகாட்டியாகவும், இறையாட்சியை அவர்கள் மனதில் விதைக்கும் வித்தாகவும் அமைந்துள்ளது. நற்கருணை தசையாய் மாறியப் புதுமைகள், திருஇரத்தம் வழிந்த புதுமைகள் மற்றும் நற்கருணை பல்லாண்டாக இன்றும் அழியாமல் உள்ள புதுமைகள், நற்கருணையில் திருமுகம் காணப்பட்ட புதுமைகள், ஐந்து காய வரம் பெற்ற சில நற்கருணைப் பக்தர்கள், நற்கருணைப் பக்தர்களின் அழியா உடல்கள் என்ற ஏழு விதமான தலைப்புகளில் உலகில் நடைபெற்ற நற்கருணைப் பற்றிய புதுமைகள் கோர்வையாக எழுதப்பட்டுள்ளன. உண்மையான, உயிர்ப்பு நிறைந்த நிகழ்வுகளை வாசிக்கும்தோறும் நம் ஆன்மாவை சிலிர்க்க வைக்கின்றன எனலாம். மேலும், விவிலியத்தில் "ஏழு" என்பதற்கு "முழுமை" என்று பொருள் கொள்ளப்படுகின்றது. இதைப் போன்றே “நற்கருணைப் புதுமைகள்' என்ற இந்நூலும் நற்கருணை நாதரின் வல்லமையினை, மகத்துவத்தை முழுமையாக உணர்ந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
இவ்வுலகை மீட்க வந்த இறைமகன் இயேசுகிறிஸ்து நற்கருணையின் வாயிலாக, நாளும் நம்மிடையே அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்துகொண்டு நம்முடன் வாழ் வாழ்ந்து கொண்டிருப்பவராய், வழிகாட்டுபவராய், நிமிடந்தோறும் வழிநடத்துபவராய் விளங்குகின்றார். நற்கருணை நாதரின் அன்பை அனுபவிக்கும் நாம், பிறருக்கும் வழிகாட்டிட வேண்டும் என்ற உன்னத உணர்வை, உத்வேகத்தை, எழுச்சியை ஏற்படுத்தும் விதத்தில் இந்நூல் விளங்குகிறது. இறைப்பணியாளர்களுக்கும். மக்களுக்கும் 'நற்கருணைப் புதுமைகள்" என்ற இந்நூலானது ஆன்ம ஈடேற்றம் பெறவும், நற்கருணையில் வாழும் இயேசுவைப் பற்றி உணர்ந்து கொள்ளவும் மிகச்சிறந்த வரலாற்று ஆவணமாகவும் வழிகாட்டும் என்பதில் மாற்றமில்லை.
காந்திபுரம், புனித பாத்திமா அன்னை ஆலயப் பொன்விழா ஆண்டில் (1962-2012) பங்குத்தந்தை என்ற விதத்தில் இவ்வாண்டு இப்புத்தகம் வெளிவருவதில் பெருமையடைகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் அருள்தந்தை ஜோனத்தன் கப்புச்சின் அவர்கள் இப்பங்கின் முன்னால் பங்குத்தந்தையாக இருந்தவர். தமிழக கப்புச்சின் மறைமாநிலத்தின் முதல் அதிபராகவும் இருந்த பெருமைக்குரியவர்.
அருள்தந்தை இறைவனின் அன்பிலும் ஞானத்திலும் இன்னும் அதிகமாய் எழுத்துப் பணியாற்றவும், நாளும் நலமுடன் வளமுடன் வாழவும் இறைமகன் இயேசு அண்ணாருக்கு அருள் புரிந்திட மன்றாடுகிறேன். வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
அருள்தந்தை அ. ஜோ. மாத்யூ கப்புச்சின்