புனித அசிசி கிளாரா

புனித அசிசி கிளாரா 1193-1253 (திருநாள் ஆகஸ்ட் 11)

இத்தாலியில் உள்ள அசிசி நகரில் மிகவும் புகழ்பெற்ற பிரபு குடும்பத்தில் பிறந்தவள் கிளாரா. ஒரு முறை 1212 ஆம் ஆண்டில் தவக்கால மறையுரையைப் புனித பிரான்சிஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். கிளாராவுக்கு 18 வயது இம்மறையுரை அவளை முற்றிலும் மாற்றிவிட்டது. அன்றே புனித அசிசியாரைப் போல் இயேசுவின் ஏழ்மையைப் பின்பற்ற முடிவு செய்தாள். குருத்து ஞாயிறு இரவு தன் அரண்மனையை விட்டு இரு தோழிகளுடன் வெளியேறி போர்சியுங்குலாப் பள்ளத்தாக்கில் தனக்காகக் காத்திருந்த புனித பிரான்சீசிடம் போய் சேர்ந்தாள். அசிசி அண்ணல் அவளுடைய அழகான தங்க நிறக் கூந்தலை வெட்டி எடுத்து வெண்மையான முக்காடை போட்டு ஆசீர்வாதப்பர் சபை மடத்தில் சேர்த்தார். புனித அசிசியாரின் துணையோடும், ஆலோசனையின் படி ஏழை சகோதிரிகளின் சபையை நிறுவினார். கடின தபமும், இரவும் பகலும் நற்கருணை ஆராதனை செய்வதும்தான் அவர்கள் துறவற வாழ்வு. நற்கருணை நாதரே அவர்களின் வாழ்வின் ஊற்றும் மையமுமாக இருந்தார். புனித கிளாரா பல துறவற மடங்களை நிறுவினார்.

ஒருநாள் சாரசன் என்ற மத விரோதிகள் அசிசியைத் தாக்கி புனித கிளாரம்மாள் மடத்தை நோக்கிப் படை எடுத்து வந்தனர் கன்னியர்கள் எல்லாம் கண் கலங்கினர். ஆனால் புனித கிளாரா நற்கருணை கதிர் பாத்திரத்தைக் கையில் ஏந்திக்கொண்டு கன்னியர் புடை சூழ கண்ணாடி ஜன்னல் முன்பு வந்தாள். அதைக் கண்ட சாரசன் கொள்ளைக் கூட்டம் பயந்து ஓடி மறைந்தது. புனித கிளாராவுக்கு நற்கருணை நாதர் தான் ஆன்மீக வலிமையும், ஆற்றலும், ஆறுதலுமாயிருந்தார். அவள் 28 ஆண்டுகள் கடும் நோயால் வேதனைப்பட்டாலும் அனைத்தையும் இயேசுவின் பாடுகளோடு சேர்த்து ஆன்ம ஈடேற்றத்திற்காக ஒப்புக் கொடுப்பாள். ஒரு கிறிஸ்துமஸ் நடு சாம பூசைக்குப் போக முடியாமல் வேதனைப்பட்ட போது இயேசுவே அவள் பேராலயத்தின்கு விண்வெளியில் எடுத்துச் சென்று பூசை காணும்படி -ஓர் அற்புதத்தைச் செய்தார். ஆகவே. புனித கிளாரா விண்வெளிப் பயணத்திற்கும், தொலைக்காட்சிக்கும் பாதுகாவலியாக அறிவிக்கப்பட்டார்.