ஒத்தமை நற்செய்தி ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த அற்புதச் செயலை கூறுகின்றன. (மத்:14:13-21; மாற். 6:30-44; லூக். 9:10-17) இந்த நிகழ்வு இஸ்ராயேல் வரலாற்றில் நடைபெற்ற இரண்டு புதுமைகளை நினைவு கூறுகின்றன.
மக்கள் பசியால் வாடிய பஞ்ச காலத்தில் எலியாஸ் அப்பங்களைப் பலுகச் செய்ததையும் (2 அரச. 4:42-44) பாலைவனத்தில் வானின்று பொழிந்த மன்னாவை உண்டதையும் நினைவுபடுத்தியது. (வி.ப. 16:13-35) எலியாசையும், மோசேயையும் விட வல்லமையுடையவர் இயேசு என்று சுட்டிக் காட்டுகிறது.
ஒத்தமை நற்செய்தி மீதியான அப்பங்களைப் பன்னிரெண்டு கூடைகளில் சேர்த்தனர் என்பது மெசியா காலத்தில் உணவு மிகுதியாகவே இருக்கும் என்பதைக் குறிக்கின்றது.
மேலும், மன்னா மறுநாள் அழிந்து போகும். ஆனால் இயேசு கொடுக்கும் புதிய மன்னா என்றும் அழியாதது மட்டுமல்ல அதை உண்போர் என்றும் சாகமாட்டார்கள் (யோ. 6:51,54,57).
அப்பங்களைப் பலுகச்செய்த போது இயேசு நான்கு காரியங்களைச் செய்தார்; அவர் அப்பத்தை எடுத்தார். ஆசிர்வதித்தார் அல்லது நன்றி கூறினார். பிட்டார் பிறகு கொடுத்தார்.
டி.ஜே. ஹாரிஸ்டன் என்ற இறையியல் வல்லுனர் கூறுவதுபோல் இந்த நான்கு காரியங்களும் இயேசுவின் இறுதி இராவுணவின் போது செய்யப் போவதை முன் அறிவித்தன. (மாற். 14:22)
அப்பங்களை பலுகச் செய்தபோது சீடரிடம் கொடுத்து மக்களுக்கு பரிமாறும்படி கட்டளையிட்டார். அதுபோல இயேசு நற்கருணையை ஏற்படுத்திய போது இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்று சீடர்களுக்கு கட்டளையிட்டார்.
எல்லோரும் வயிறார உண்டனர் என்பது நற்கருணை எல்லா இனத்தாருக்கும், யூதர்கள், யூதரல்லாதவர் எல்லாருக்கும் வழங்கப்படும் என்பதை குறிக்கின்றது. புதுமன்னாவாகிய நற்கருணையில் தான் பரலோகமும், பூலோகமும் சந்திக்கின்றன.
இறைவன் மனிதரைச் சந்திக்கிறார். தூயவர் பாவியை மீட்கிறார். பாவி புனிதராகிறான். பகைமை மறைந்து உறவு மலர்கிறது. சாவுக்கு முடிவும் வாழ்வுக்கு விடியலும் தோன்றுகின்றன.