சாந்தாராம், போர்துகல் 1247

போர்துகல் நாட்டில், பாத்திமா நகரிலிருந்து 35 மைல் தொலைவில் உள்ளது சாந்தாராம் என்ற ஊர் (Santarem, Portugal). அங்கு வாழ்ந்து வந்த ஒரு பெண், கணவனுடைய பிரமாணிக்கமற்ற போக்கினால் மிகவும் துன்புற்றாள். 

தன் துயரத்தைப் போக்க ஒரு மந்திரக்காரியிடம் ஆலோசனைக் கேட்டாள். "நீ ஒரு வசீகரம் பண்ணப்பட்ட வசிகரங்கள், (Consecrated host) நற்கருணையைக் கொண்டு வந்தால், இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கிறேன்” என்று கூறினாள். இது தேவ துரோகம் என்று அஞ்சி அவள் செய்யாமலிருந்தாள். 

ஆனால் சோதனை தாங்காமல், ஒருநாள் புனித ஸ்டீபன் ஆலயத்திற்குச் சென்று, திருப்பலியில் பங்கேற்று, நன்மை வாங்கி அதை விழுங்காமல், ஒரு கைக்குட்டையில் சுற்றி வீட்டிற்கு எடுத்து வந்தாள். வழியில் நற்கருணையிலிருந்து இரத்தம் சொட்ட ஆரம்பித்தது. அவள் கையிலிருந்து இரத்தம் கசிவதைக் கண்டவர்கள். அவள் காயப்பட்டிருக்கிறாள் என்று எண்ணி, அவளுக்கு உதவி செய்ய ஓடி வந்தனர். 

அவளோ ஓட்டமாக வீட்டிற்குள் சென்று, தன் அலமாரியில் நற்கருணையை துணியுடன் வைத்து விட்டாள். அன்று இரவு அவளுக்குத் தூக்கமே வரவில்லை. ஒரே பயம். இரவில் கணவன் வந்தான். வீடு இருளாய் இருந்தது. ஆனால் அந்த அலமாரியிலிருந்து ஒளிவீசி அறையை பிரகாசமாக்கியது. அவள் தான் செய்தக் குற்றத்தை கணவரிடம் சொல்லாமல் இருக்க முடியவில்லை. 

இருவரும் மண்டியிட்டு இரவு முழுவதும் ஆராதனை செய்தனர். அண்டை வீட்டுகாரரும் ஒளியைப் பார்த்து வீட்டிற்குள் வந்து சேர்ந்தனர். பங்குக்குருவுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவரும் உடனே வந்து, நற்கருணையையும், இரத்தக்கறை படிந்த துணியையும், ஆடம்பர பவனியாக புனித ஸ்டீபன் ஆலயத்திற்கு எடுத்துச் சென்று, மெழுகுச் சிமிழில் நற்கருணைப் பேழையில் வைத்தார். 

சில நாட்களுக்குப் பின் நற்கருணைப் பேழையை திறந்து பார்த்த போது, மெழுகுச் சிமிழ் உடைந்திருப்பதையும், ஒரு பொன்சிமிழில் நற்கருணை மாமிசமாய் மாறி இருப்பதையும் கண்டு ஆச்சரியப்பட்டார். 

ஆயர் ஓர் ஆராய்ச்சிக் குழுவை ஏற்படுத்தி அதன் அறிக்கைப்படி, நற்கருணை உண்மையாகவே இயேசுவின் மாமிசமாயிருப்பதை உறுதி செய்தார். அதன் பிறகு ஸ்டீபன் ஆலயம், "நற்கருணைப் புதுமையின் ஆலயம்" என்று பெயர் மாற்றப்பட்டது. 

டாக்டர் ஆர்தர் (DR. ARTHUR HOAGLAND) இந்தத் திருத்தசையையும், உறைந்த திருஇரத்தத்தையும் பலமுறை ஆராய்ச்சி செய்து, இது உண்மை என்பதையிலும் மனித தசையும், மனித இரத்தமும் உறுதி செய்துள்ளார். 

சென்ற 700 ஆண்டுகளாக இந்தத் தசையோ, இரத்தக்கட்டியோ சிறிதும் கெடாமல் இருப்பதே, எல்லோருக்கும் ஆச்சரியமாக உள்ளது. இன்றும் சாந்தாரத்தில், "நற்கருணைப் புதுமை தேவாலயத்தில்" இந்த அதிசயத்தைக் காணலாம்.