ஒவ்விதா 1273-1280

1273ல் புனித அகுஸ்தினார் தேவாலயத்தில் ஒரு புதுமை நடந்தது. அங்கு நற்கருணை தசையாக மாறிய புனிதப் பண்டம் இன்றும் நம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 13-ம் நூற்றாண்டில் ஜுவானி பாடிஸ்தா தோரியா (Giovanni Battista Doria) எழுதிய பத்திரமும், 1295ல், 7-ம் போனிபாஸ் திருத்தந்தையும், 15856 5ஆம் சிக்ஸ்டஸ் எழுதிய ஆவணங்களும் ஆண்ந்திநோரியும் (Antinon), ஃபில்லா (Filla)வும் எழுதிய சாட்சிப் பத்திரங்களும் புனித் அகுஸ்தினார் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளன (Offida, Italy).

1273 ஆம் ஆண்டு லான்சியானோவில் வாழ்ந்து வந்த ரிச்சியாரல்லா (Richiarella) என்ற பெண், தன் கணவர் ஜியாகோமோ ஸ்தாசியோ (Giacomo stasio) வின் அன்பைத் திரும்பப் பெற என்ன செய்ய வேண்டும் என்று ஒரு மந்திரக்காரி யிடம் ஆலோசனை கேட்டாள். அதன்படி அவள் கோயிலுக்குச் சென்று நற்கருணையை வாங்கி, வீட்டிற்கு கொண்டு வந்து, அதைப் பொடியாக்கி, கணவரின் உணவில் கலந்து கொடுக்கும் எண்ணத்துடன், நற்கருணையை ஒரு சட்டியில் போட்டாள். 

ஆனால், நற்கருணை திடீரென்று தசையாக மாறிவிட்டது. அதிர்ச்சியுற்ற ரிச்சியாரல்லா, இரத்தம் நிறைந்த தசையை அந்த சட்டியுடன் துணியில் சுற்றிக் கணவரின் மாட்டுத்தொழுவத்தில் புதைத்து விட்டாள். ஜியோகோமோ தன் கழுதையை மாட்டுத் தொழுவத்திற்கு இழுத்துச் செல்லும்போதெல்லாம். கழுதை நற்கருணை புதைத்துள்ள இடத்தில் மண்டியிட்டு வணங்கும். 

இப்படி ஒவ்வொரு முறையும் கழுதை செய்ததைக் கண்ட கணவன், தன் மனைவி ஏதோ மந்திரம் செய்திருப்பாள் என்று சந்தேகப்பட்டான். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ரிச்சியாரல்லா தான் செய்ததை எண்ணி மனம் வருந்தி, லான்சியானோவில் உள்ள ஜியோகோமோ டியோதவல்லவி என்ற அகுஸ்தினார் துறவியிடம் பாவ அறிக்கை செய்தாள். 

துறவியும் தொழுவத்தில் புதைந்து கிடந்த பாத்திரத்தையும், இரத்தக்கறை படிந்த துணியையும், எந்த மாற்றமும் இல்லாத தசையையும் எடுத்து வந்துவிட்டார். புனித பண்டத்தை பத்திரப்படுத்த மரத்தினால் ஒரு சிலுவையைச் செய்யும்படி ஒரு தச்சனை அழைத்தார். அவனுக்குப் புனித பண்டத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது. அவன் அதைத் தொட்டதும் அவனுக்கு காய்ச்சல் வந்து விட்டது. 

ஜியோகோமோ அவனிடம். “நீ பாவசங்கீர்த்தனம் செய்திருக்கிறாயா" என்று கேட்டார். காரணம் நற்கருணையைத் தொடுவதற்கு முன்னால் பாவ அறிக்கை செய்து பரிசுத்தமாய் இருக்க வேண்டும். அவன் “இல்லை” என்றான். உடனே அவன் பாவ அறிக்கை செய்து பாவமன்னிப்பு பெற்றவுடன் காய்ச்சல் அவனை விட்டு நீங்கியது. 

பிறகு நற்கருணை உள்ள சிமிழை வைத்து அந்தச் சிலுவையில் பதித்து விட்டார். இந்தப் புனித பண்டத்தை புனித அக்குஸ்தினார் ஆலயத்தில் ஒவ்விடாவில் இன்றும் காணலாம்.