பலி இரத்தம்

இஸ்ராயேல் மக்கள் பலி இரத்தத்தை புனிதமாகவும் புனிதப்படுத்தும் இரத்தமாகவும் யாவேயிக்கு மிகவும் உகந்த பலிப் பொருளாகவும் கருதினர். இரத்தம் உயிரைக் குறிப்பதால் கடவுளுக்கு ஏற்றதாக கருதப்பட்டது. பலி இரத்தம் பாவப்பரிகாரப் பொருளாகவும் யாவேயிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டது. (லேவி. 17:11). உடலின் உயிர் குருதியில் உள்ளது. அதனை நான் உங்களுக்காக பலி பீடத்தின் மேல் உங்கள் உயிருக்கெனப் பாவக்கழுவாய் செய்யும்படி ஆணையிட்டேன். ஏனெனில், அது உயிருக்கான பாவகழுவாய் நிறைவேற்றும் குருதி மேலும் வெட்டப்பட்ட ஆட்டுக்கிடாயின் இரத்தம் மக்களை புனிதப்படுத்தவும், பலீபீடத்தை திருநிலைப்படுத்தவும் பயன்பட்டது. (லேவி 8:22-28) இரத்தமே உயிர் என்பதால் இஸ்ராயேல் மக்கள் இரத்தத்தை உயிருக்கு ஊற்றாகிய யாவேயிக்கு பலி செலுத்தினார். ஆனால் அதை குடிக்கக் கூடாது என்று கடவுளே கட்டளை இட்டிருந்தார். (இ.ச. 12:23-27) எகிப்து நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற மேசேக்கும் ஆரோனுக்கும் இஸ்ராயேல் மக்களுக்கும் யாவே கொடுத்த கட்டளைப்படி அவர்கள் ஆட்டு இறைச்சியை உண்டனர். ஆனால் ஆட்டு இரத்தத்தைத் தங்களை காப்பாற்றிக் கொள்ளும்படி வீடு களின் கதவு நிலைகளிலும் மேல் சட்டத்திலும் பூசினர். (லேவி. 12:7- 8) லேவியர்கள் பலி செலுத்தியபோது இரத்தத்தை ஊற்றி யாவேயின் பலி பீடத்தைப் புனிதப்படுத்தினர். (எசேக் 43:20; 45:18-20) தொழுநோயாளிகளைத் தூய்மைபடுத்தவும் பயன் படுத்தினர் (லேவி 14:7). குருக்களின் ஆடைகளைத் தூய்மைப் படுத்தவும் இரத்தம் பயன்படுத்தப்பட்டது (லேவி 8:20-30).

இஸ்ராயேல் மக்கள் யாவேயோடு செய்து கொண்ட உடன்படிக்கை எல்லாம் இரத்தத்தினால் ஆன உடன்படிக்கையே. ஆபிரகாமின் உடன்படிக்கை (தொ.நூ. 15:9-18) மோசேயின் உடன்படிக்கை (வி.ப 24:48) இரத்தத்தினால் முத்திரையிடப்பட்டன. மோசே கன்றுகுட்டிகள், வெள்ளாட்டுக் கடாக்கள் இவற்றின் இரத்தத்தை மக்கள் அனைவர் மீதும் தெளித்து கடவுள் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ என்றார். (எபி. 9:19-20) பழைய ஏற்பாட்டில் உடன்படிக்கை மிருகங்களின் இரத்தத்தால் முத்திரையிடப்பட்டது போல் புதிய ஏற்பாட்டில் இயேசு சிலுவையில் சிந்திய இரத்தத்தால் புதிய முத்திரையிடப்பட்டது. (மத் 26:26-30; மாற். 14:22-26; எபி 9:11- 14; 10:1-10) இயேசுவின் இரத்தமே மீட்பைக் கொண்டு வந்தது என்பதைத் புதிய ஏற்பாடு மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. தி.ப. 20:28; உரோ. 3:25; எபேசி. 1:7-12; கொலோ 1:20; பேதுரு 1:2-19, யோவா 6:54-59; 1யோவா 1:7; திருவெளி. 1:5; 5:9; 7:14; 12:11; 19:13) பழைய ஏற்பாட்டில் இரத்தம் வெளியே கொட்டப்பட்டது. ஆனால் புதிய ஏற்பாட்டில் இயேசு தன் இரத்தத்தைக் குடிக்கும்படி கட்டளை இடுகிறார். ஏனெனில் இந்த இரத்தம் பாவ மன்னிப்புக்காக சிந்தப்படும் இரத்தம். ஆன்மீக பானமாகவும் இறைத்தந்தையோடு இணைந்திருக்கவும் கொடுக்கப்படுகிறது.

ஆகவே இயேசு, "வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அது போல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே. இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள் இவ்வுணவை உண் போர் என்றும் வாழ்வர்" என்றார் (யோவா. 6:57,58). புதிய ஏற்பாட்டின் பலியாக சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம் நமக்கு இறைவாழ்வைத் நித்திய வாழ்வை, முடிவில்லா வாழ்வை தருகிறது. பாவத்தைப் போக்குகிறது. மீட்பை உறுதி செய்கிறது. சமாதானத்தைத் தருகிறது. தந்தையோடு ஒப்புரவாக்குகிறது. (உரோ 3:25:எபேசி 1:7;2:13;கொலோ.1:20; எபி.9:21:1யோவா.1:7)

பழைய ஏற்பாட்டில் காணப்படும் நற்கருணை முன் அடையாளங்கள் அனைத்தும் மெசியாவின் வருகையின்போது நிறைவேற்றப்படும். ஈடு இணையில்லா சிலுவைத் தியாகப் பலியையும் ஒப்புயர்வற்ற நற்கருணை விருந்தையும் உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் இயேசுகிறிஸ்து வழியாக மீட்பைக் கொண்டு வரும் இறைத்திட்டத்தையும் சுட்டிக்காட்டுகின்றன.