2009இல் 'நற்கருணை நாதர்' என்ற நூலையும், 2012இல் 'நற்கருணை புதுமைகள்' என்ற நூலை 9000 பிரதிகள் தமிழிலும், 2017இல் 2000 பிரதிகள் மலையாளத்திலும் வெளியிட்டுள்ளோம். தற்போது 'நற்கருணை நாதரும் நற்கருணை புதுமைகளும்' என்ற நூலை ஒரே நூலாக வெளியிடுகிறோம். காரணம் நற்கருணை இன்றி திருச்சபை இல்லை; திருச்சபையின்றி நற்கருணை இல்லை. நற்கருணையே திருச்சபையின் ஊற்றும், மையமும், முழுமையுமாகும்.
இறையியல், இறைவனையே மையமாக கொண்டுள்ளது. அந்த இறைவனையே முழுமையாக நற்கருணையில் வெளிப் படுத்தியவர் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. எனவே தான் அகில உலகிலும் திருச்சபையிலும் மாபெரும் ஆன்மீகப் புரட்சியை அரங்கேற்றிய மறைந்த மாணிக்கம் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் திருச்சபைக்கு ஒரு புதிய பெயரைச் சூட்டினார், அது தான் 'நற்கருணை திருச்சபை.'
சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட பேராயர், மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி, தன் அணிந்துரையில் கூறுவது போல். இறைமகன் இயேசுவின் நீங்காத உயிருள்ள பிரசன்னமாகிய திவ்ய நற்கருணை, நம் கத்தோலிக்க கிறிஸ்தவ வாழ்வின் அடித்தளமும், அச்சாரமுமாக அமைந்துள்ளது. இயேசுவின் பணியைத் தொடர்ந்து நிறைவேற்றும் திருத்தூதர்களாக மட்டுமல்ல, அவரது உடலை உட்கொண்டு, திருஇரத்தத்தை பருகுவதால், இயேசுவாகவே நாம் மாற்றம் பெறுகிறோம். மறுகிறிஸ்துவாகவே மாறுகிறோம்."
எடுத்துக்காட்டாக புனித அசிசி பிரான்சீஸ் முதல் முதலாக, இயேசுவின் ஐந்து திருக்காயங்களையும் தன் உடலில் பெற்றார். நம் காலத்தில் வாழ்ந்து மரித்த புனித பியோ 50 ஆண்டுகளாக ஐந்து திரு காயங்களையும் பெற்று இயேசுவின் பாடுகளில் பங்கு பெற்றார். தென் கொரியாவில், நாஜு என்ற ஊரில் வசிக்கும், ஜுலியா கிம் என்ற பெண்மணி ஐந்து காயங்களும், முள்முடி காயங்களும், உடல் முழுவதும் சாட்டையடி காயங்களையும் பெற்றுள்ளதை VCD யில் காணலாம், ஜூலியா கிம் வத்திக்கானுக்கு சென்று புனித திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் நிறைவேற்றிய திருப்பலியில் நற்கருணையை வாங்கிய பொழுது, அப்பம் இயேசுவின் இரத்தம் தோய்ந்த மாமிசமாக மாறியதை VCD யில் காணலாம்.
நற்கருணை நாதரை தினமும் உட்கொண்ட ஐந்து காய வரம் பெற்ற ஜெர்மன் நாட்டு தெரேசா நீயூமன் (1896-1962) 40 ஆண்டுகள் உணவே சாப்பிடாமலும், தண்ணீர் முதலாய் குடிக்காமலும் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை எந்த விஞ்ஞான ஆராய்ச்சியும் விளக்கம் தர முடியவில்லை. விந்தையிலும் பெரிய விந்தை என்னவென்றால் அவள் எடை குறைவதற்கு மாறாக எடை கூடியதே மிகப்பெரிய அதிசயம்.
1927 இல் அவள் எடை 55 கிலோ
1935 இல் அவள் எடை 63.5 கிலோ
1945 இல் அவள் எடை 84 கிலோ
1950 இல் அவள் எடை 90 கிலோ
1953 இல் அவள் எடை 106 கிலோ
"உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன். மானிட மகனுடைய சதையை உண்டு. அவருடைய இரத்தத்தை குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள், என் சதையை உண்டு இரத்தத்தை குடிப்பவர் நிலை வாழ்வை கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு, எனது இரத்தம் உண்மையான பானம்" (யோ 6:33-55) என்ற இயேசுவின் வாக்குறுதி உண்மை அன்றோ?
நம் தமிழ் நாட்டில் தஞ்சை மாநகரில், கார்மேல் மடத்தை சார்ந்த அருட் சகோதரி ரோசியும், ஐந்து காயங்களுடன், முள்முடிகாயங்கள் பெற்றுள்ளார். கோவை மறை மாவட்டத்தை சார்ந்த விமலாவும் ஐந்து காயங்களும், முள்முடி காயங்களும், சாட்டையடி காயங்களும் பெற்றுள்ளார். கேரளா கஞ்சிக்கோடு, ராணி மேரியும் ஐந்து காய வரம் பெற்றுள்ளார்.
மேலும், 300 க்கு மேற்பட்ட புனிதர்களுடைய உடல் பல நூற்றாண்டுகளாக அழியாமல் உள்ளன என்பது கத்தோலிக்க திருச்சபையில் மட்டும்தான். புனித பியோவின் உடல் 50 ஆண்டுகளாக அழியாமல் உள்ளது. அவர் இருதயத்தை (திருப்பண்டாக) புனித ஆறாம் சின்னப்பர் திருத்தந்தைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
பட்டுக்கோட்டையைச் சார்ந்த வீரக்குறிச்சி என்ற கிராமத்தில் புனித அந்தோணியார் சிற்றாலயம் உள்ளது. அங்கு 86 வயது பாட்டி ரீத்தாமா கடந்த 10 ஆண்டுகளாக நற்கருணையை மட்டும் தினமும் உண்டு இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். நான் அந்த மூதாட்டியை நேரில் கண்டுள்ளேன். அவர்கள் தன்னந்தனியாக ஒரு குடிசையில் இயேசுவோடு இரவும் பகலும் ஜெபத்திலும், தபத்திலும் ஒன்றித்து புனிதையாக வாழ்ந்து வருகிறார்கள்.
திருகாய வரமும் அழியா திருவுடலும், நற்கருணை வாங்கியவர்களுக்கு மட்டுமே, அதுவும் கத்தோலிக்க திருச்சபையில் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடதக்கது. இவை அனைத்தையும் இந்தப் புதிய பதிப்பிலும் VCD யிலும் நீங்கள் பார்க்கலாம்.
-அருள்தந்தை ஜோனத்தன் கப்புச்சின்