புனிதத் தந்தை பியோ 1887-1968 (திருநாள் செப் 23)
தந்தை பியோ நம் காலத்தவர். கப்புச்சின் துறவியாகிய இவர் 50 ஆண்டுகள் ஐந்து காய வரம் பெற்ற ஒரே குருவானவர். நற்கருணை மீதும், அன்னை மரியாளின் மீதும் மிக ஆழமான பக்தி கொண்டிருந்தார். நற்கருணையே புதுமைகளுக்கெல்லாம் முதன்மையான ஒப்புயர்வற்ற புதுமை என்று கூறும் இவர். திருப்பலி நிறைவேற்றும் போது பல மணி நேரம் பரவசமாகி விடுவார். இயேசு நம்மீது வைத்துள்ள அன்பின் மிக உன்னதமான வெளிப்பாடு நற்கருணை. நாம் மனிதமடைவதற்கு மிகவும் சிறந்த வழி நற்கருணையை விசுவாசத்துடனும், தூய உள்ளத்துடனும் வாங்குவதே என்பார் தந்தை. பரவச நிலையில் மெய் மறந்து இருக்கும் போது இயேசு இவருடன் நேரடியாகப் பேசுவார். "என் அன்பிற்கு மக்கள் காட்டும் நன்றி கெட்ட நடத்தையைப் பார். அவர்கள் என்னைக் கோயிலில் பகலிலும் இரவிலும் தனியாக விட்டு விட்டுப் போகின்றனர். பீடத்தில் இருக்கும் நற்கருணையை அசட்டை செய்கிறார்கள். அன்பின் அருட்சாதனத்தைப்பற்றி யாரும் பிரசங்கிப்பதில்லை. அப்படிப் பேசினாலும் மெத்தமான உள் உணர்வின்றி பேசுகிறார்கள்" என்று இயேசு முறையிட்டார். திருப்பலி நிறைவேற்றி விட்டு நன்றி கூறும் போது தான் தந்தை பியோவுக்கு ஐந்து காய வரம் கிடைத்தது. திருப்பலியோடு தன்னையும் பலிப் பொருளாய் அர்ப்பணித்து ஐம்பது ஆண்டுகள் புனிதராக வாழ்ந்து வந்த இவர் ஒப்புரவு அருட்சாதனத்தின் வழியாக கோடிக்கணக்கான பாவிகளை இயேசுவின் பாதத்திற்குக் கொண்டு வந்தார் என்பதே மிகப்பெரிய புதுமை. அவர் மரித்து 40 ஆண்டுகளுக்கு பிற கும் 2008 அவர் திருவுடல் சற்றும் அழியாமல் யொவானி ரொத்தந்தோவில் உள்ளது.