நற்கருணை அருட்சாதனப் பலி

இறுதி இராவுணவு, அருட்சாதனப் பலி என்றே திருச்சபை ஆதி முதல் போதித்து வந்துள்ளது. (Sacrament - Sacrifice)

1. மோசே தகனப்பலி செலுத்தியது போல் இயேசுவும் தலைமை தாங்கி பலி செலுத்துகிறார்.

2. "துன்புறும் ஊழியர்" (Elaed Yahweh) என்ற ஏசையா கூற்றுப்படி இயேசு தன்னையே பலியாக ஒப்புக் கொடுக்கிறார் (ஏசா. 53:10)

3. இயேசுவின் வார்த்தையும் செயலும் இறுதி இராஉணவு முற்றிலும் தகனப்பலி என்றே காட்டுகின்றன. "இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல் இது பலருக்காகச் சிந்தப்படும் என் இரத்தம்." என்ற வார்த்தைகள் எண்பிக்கின்றன.

4. பெரியகுரு பலி செலுத்தும் போது பலிப் பொருளாகிய இறைச்சியையும், இரத்தத்தையும் பலி பீடத்தில் பக்கம் பக்கமாக வைப்பர். அதே போல் இயேசு அப்பத்தையும் இரசத்தையும் பக்கம் பக்கமாய் பலி பீடத்தில் வைத்து"இது என் உடல், இது என் இரத்தம்" என்றார்.

5.உடன்படிக்கை எப்போதும் பலியினால் உறுதி செய்யப்பட்டது. எனவே தான் இயேசு, "இது உங்களுக்காக சிந்தப்படும் எனது இரத்தத்தால் நிலைபடுத்தப்படும் புதிய உடன்படிக்கை" என்றார். (லூக். 22.20)

6. யூதர்கள் வழக்கப்படி பலி பொருள் உண்மையாலும் ஒரு உயிருள்ள பொருளாகக் கொடுப்பார்கள். இயேசு, "எனது சதை உணவு, எனது இரத்தம் உண்மையான பானம்" என்றார் (யோவா. 6:55). மேலும், "எனது சதையை உண்டு என் இரத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர். நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்" (யோவா. 6:56-57). அதனால் தான் யூதர்கள் "நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படி கொடுக்க இயலும்?" (யோவா. 6:52) என்று கேட்டனர். இங்கு உவமைக்கோ அடையாளத்திற்கோ இடமே இல்லை.

7.அப்போஸ்தலிக்கப் பரம்பரைப்படி திருத்தூதர்கள் இயேசுவின் கட்டளையை ஏற்று திருப்பலி செலுத்தி வந்தனர். இயேசு சொன்ன பல உவமைகளை (எ.கா.) நானே நல்லாயன் அல்லது நானே திராட்சைக் கொடி என்பவற்றை உவமைகளாக விளக்கினார்கள். ஆனால், இறுதி இராவுணவை அவர்கள் உவமைகளாக விளக்கம் தரவில்லை. அதற்கு மாறாக அதை அருட்சாதன பலியாகவே எடுத்துரைத்தார்கள்.