லான்சியானோ, இத்தாலி 1250

இத்தாலியில் உள்ள, லான்சியானோ நகரில் (Lanciano, Italy) “லெகான்ஷியன் டாமிஷியன் என்ற சிற்றாலயத்தில், பேசில் சபைக் குருவானவர் திருப்பலி நிறைவேற்றினார். திவ்ய நற்கருணையில் உண்மை யாகவே கிறிஸ்து இருக்கிறாரா? என்ற சந்தேகம் அத்துறவியை ஆட்கொண்டது. திருப்பலியின் போது, "இது என் சரீரம், இது என் இரத்தம் என்ற வசீகர வார்த்தையை உச்சரித்தபோது, அப்பம் கிறிஸ்துவின் உண்மையான தசையாகவும், திராட்சை இரசம், கிறிஸ்துவின் உண்மையான திருஇரத்தமாகவும் மாறிவிட்டன. குருவும், திருப்பலியில் பங்கு கொண்ட அனைவரும் இந்த உண்மை நிகழ்வைக் கண்டு ஆச்சரியமும், அதிர்ச்சியும் உற்றனர்.

800 ஆண்டுகளுக்கு முன் இந்த நிகழ்வு நடந்தாலும், இத்திரு தசையும், திருஇரத்தமும் பாதுகாக்கப்பட எந்த விதமான வேதியியல் இரசாயமும் (Preservatives) பயன்படுத்தாமல் திறந்து வைக்கப் பட்டுள்ளது. இவை எந்த மாற்றமும் இல்லாமல், இன்று வரை அன்று போல் உள்ளன என்பதே எல்லாப் புதுமையிலும் புதுமையாக விளங்குகின்றது. ஆயர் லண்டஃப் (Bishop landuff of Chieti) இவை உண்மை நிகழ்வு என்று 20.04.1252ல் சான்றிதழ் வழங்கியுள்ளார்.

உரோமை தலைமைப் பீடத்தின் அனுமதியுடன் 1970 இல் லான்சியானோ பேராயரும், அப்ரூசோ (Abruzzo) பிரான்சிங்கன் மறைமாவட்ட அதிபரும், டாக்டர் எட்வர்டு லினோலியிடம் பரிசோதனை செய்யும்படி கேட்டுக்கொண்டனர். இவர் அரசோ (Arezzo) மருத்துவமனையில், anatomy, histology, chemistry, clinical microscopy போன்ற பலகலை வல்லுநர். மார்ச் 4, 1971 இல் இவர் ஓர் ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டார்.

1. “இந்தப் புதுமையான தசை மனித இதயத்திலிருந்து எடுக்கப்பட்ட தசையின் திசுக்களால் ஆனது (Muscular striated tissue of the myocardium).

2. Chromatographic analysis பரிசோதனையின் படி, எந்த சந்தேகத்திற்கோ, கருத்து வேறுபாட்டிற்கோ இடமின்றி இது, உண்மையாகவே மனித இரத்தம்தான்.

3. Hematological பரிசோதனையின்படி இந்த தசையும், இரத்தமும் ஒரே மனிதருடைய தசையும், இரத்தமும் என்றும், AB குரூப்பை சேர்ந்தவை என்றும் அறிதியிட்டு கூறுகிறது. டூரின் நகரில் உள்ள இயேசுவை அடக்கம் செய்தபோது சுற்றி வைத்திருந்த துணியின் இரத்தக்கறையும் AB வகையைச் சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

4. சாதாரண இரத்தத்தில் காணப்படும் புரதசத்துக்கள் (Proteins) அளவோடு காணப்படுகிறது.

5. உடலை அழியாமல் பதப்படுத்தி பாதுகாப்பதற்காக, பழங்காலத்தில் உபயோகப்படுத்திய எந்த ரசாயனப் பொருளும் பயன்படுத்தப்படவில்லை என்று அறிக்கை கூறுகிறது.

மேலும் United Nations (World Health Organization) நியூயார்க்கிலும், ஜெனிவாவிலும் மருத்துவக்குழுவும், டிசம்பர் 1976 இல் வெளியிட்டுள்ள அறிக்கையில் டாக்டர் லினோலியின் அறிக்கை முற்றும் உண்மையானது என்றும், இந்தத் தசைக்கோ, இரத்தத்திற்கோ எந்த விஞ்ஞான விளக்கமும் சொல்வதற்கில்லை என்று அறுதியிட்டு கூறியுள்ளது. அனைத்திற்கும் மேலாக இந்தத் தசையும், இரத்தமும் உயிருள்ளதாக (இன்று எடுத்தவைப்போல்) இருப்பதே மிகப்பெரிய ஆச்சரியம்.