அவுக்ஸ்புர்க், ஜெர்மனி 1194

ஜெர்மனி நாட்டில் அவுக்ஸ்புர்க் (Ouksburg, Germany) என்ற நகரில் ஒரு கத்தோலிக்கப் பெண், 1194 இல் திருப்பலியின் போது நற்கருணை வாங்கியபிறகு, பக்தியின் காரணமாக, அதை உட்கொள்ளாமல், யாருக்கும் தெரியாமல் ஒரு மெழுகுச் சிமிழில் பத்திரப்படுத்தித் தன் வீட்டில் வைத்திருந்தாள். ஐந்து ஆண்டுகள் கழித்து தான் செய்தது தவறு என்று உணர்ந்து, பங்குக் குருவிடம் பாவ அறிக்கை செய்தாள், பங்குக் குரு அவள் வீட்டிற்குச் சென்று நற்கருணை வைத்திருந்த சிமிழைத் திறந்து பார்த்தபோது, இரத்தத்தில் தோய்ந்த தசையாக மாறி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். அருட்திரு. பெர்தோல்டு உடனே, உடல்ஸ்கால் ஆயருக்குத் தகவல் அனுப்பினார். பிறகு ஆயரும், குருகுலத்தார் அனைவரும், விசுவாசிகளும் தசையாய் மாறிய நற்கருணையை ஆடம்பர பவனியாக மறைமாவட்ட பேராலயத்திற்குக் கொண்டு வந்தனர். 780 ஆண்டுகளுக்கு பிறகும் தசையாய் மாறிய நற்கருணையில் எந்த மாற்றமுமின்றி சிறிதும் கெடாமல் இயேசுவின் திருஉடல் அன்று போல் இன்றும் இருப்பது புதுமையிலும் புதுமையே! ஆயர் டெக்ரட் 1199 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள். நற்கருணைத் திருவிழாவை அவுக்ஸ்புர்க் மறைமாவட்டம் முழுவதும் கொண்டாடும்படி சுற்றறிக்கை இட்டார்.

ஜெர்மனியில் உள்ள அவுக்ஸ்புர்க் என்ற ஊரில் தான் 31.10.1517 இல் மார்டின் லூத்தர் ஏற்புடைமை பற்றிய புரட்சிக் கருத்தை வெளியிட்டார். அன்றே கத்தோலிக்கத் திருச்சபை இரண்டாக (Catholics and protestants) பிளவுபட்டது. அதே அவுக்ஸ்புர்கில் தான், 31.10.1999 இல் அகில உலக லூத்தரன் சபையும் உரோமன் கத்தோலிக்க சபையும், ஏற்புடைமை (Justification) பற்றிய போதனைகளில் கருத்தொன்றித்திருப்பதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்ட போது, 482 ஆண்டுகளாக நீடித்த பிரிவினைக்கு முற்றுப்புள்ளியிடப்பட்டது. நற்கருணைநாதர் இயேசு கிறிஸ்து, "தந்தாய், நீர் என்னுள்ளும், நான் உம்முள்ளும் இருப்பதுபோல், அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்" (யோவா 17:21) என்ற இறைவாக்கு பிளவுபட்டிருந்த இரு சபைகளையும் மீண்டும் அதே அவுக்ஸ்புர்கிலே, அதே அக்டோபர் 31-ம் நாளிலே ஒன்று சேர்ந்தது புதுமையல்லவா!