புதுமைகளும், அற்புதங்களும், அதிசயங்களும் அன்றாடம் நிகழ்கின்றன. இவை இரண்டு வகைப்படும். ஒன்று இயற்கையாக, இறைதிட்டத்தின்படி நடப்பவை. எ.கா. நிலா நாம் வாழும் பூமியைச் சுற்றி வருகிறது. பூமியோ சூரியனைச் சுற்றி வருகிறது. இவை தினமும் தவறாமல் கிரமத்தோடு நடைபெறுவதை நாம் கண்ணால் கண்டு ஆச்சரியப்படுகிறோம்.
கண்ணால் காண முடியாத கோடிக்கணக்கான நட்சத்திரங்களும் கோள்களும் விண்வெளியிலே வலம் வருகின்றன என்பதை விஞ்ஞான அறிவால் அறிகிறோம். அதுபோலவே உயிருள்ள அனைத்தும் இறைத்திட்டத்தின்படி இயங்குகின்றன. எ.கா. விவசாயி நெல்லையோ, கோதுமையையோ விதைக்கிறான், நீர் பாய்ச்சுகிறான், உரமிடுகிறான். 6 மாதம் கழித்து பெறும் விளைச்சலை அறுவடை செய்கிறான். தோட்டக்காரன் மா, பலா, தென்னை கன்றுகளை நடுகிறான். நீர் பாய்ச்சி, உரம் போட்டு வளர்க்கிறான். சில ஆண்டுகள் கழித்து அவை சுவையான, இனிமையான கனிகளைக் கொடுக்கின்றன.
'நீ உன் தாய் வயிற்றில் இருந்தபோதே, பெயர் சொல்லி அழைத்தேன், உன்னை தேர்ந்து கொண்டேன்" என்று யாவே எரேமியா இறைவாக்கினருக்கு கூறுகிறார் (எரே. 1:5). நாம் எப்படி 10 மாதம் தாய் வயிற்றில் உருவானோம், எதை உண்டோம், எதைக் குடித்தோம், எப்படி மூச்சுவிட்டோம் என்று எண்ணிப் பார்த்தால் அது ஒரு பெரிய அதிசயமல்லவா? பிறந்த போது தாய்ப்பாலைச் சுவைத்துக் குடிக்கக் கற்றுத் தந்தது யார்? தாய் உண்ட சைவ, அசைவ உணவெல்லாம், எப்படி இரத்தமாக மாறியது, எப்படி அந்த இரத்தம் தாய்ப்பாலாய் மாறியது என்று நாம் அறிய முடியுமா? தாய்ப்பாலை குடித்த நம் உடலில் அது எப்படி மீண்டும் இரத்தமாக மாறியது என்று என்றாவது வியந்ததுண்டா? இவையாவும் அதிசயங்கள் தான்.
இரண்டாவது வகை புதுமைகள் இயற்கைக்கு அப்பாற்பட்டவை, இறை திட்டத்தின்படி, இறை சித்தத்தின்படி நடப்பவை. மோசே எப்படி தன் கைக்கோலைக் கொண்டு எகிப்து நாட்டில் ஓடிய நைல் நதி நீரையும், நாட்டில் உள்ள நீர்நிலைகளை எல்லாம் இரத்தமாக மாற்றினார் என்று படிக்கிறோம். (வி.ப.7:20-22) அதே மோசேதான் தன் கைத்தடியைக் கொண்டு, செங்கடலை இரண்டாகப் பிரித்து, இஸ்ராயேல் மக்கள் கால் நனையாமல் செங்கடலைக் கடந்து செல்லவும், பாவோன் படை அதே செங்கடலில் மூழ்கி மடியவும் செய்தார் என்பதை (வி.ப. 14:16-31) வியப்புடன் நாம் விடுதலைப் பயணத்தில் படிக்கிறோம்.
புதிய ஏற்பாட்டின் மோசேயாகிய இயேசு, கானாவூரிலே வெறும் தண்ணீரை முதல் தரமான திராட்சை இரசமாக மாற்றினார் என்றும் (யோ 2: 3-11) ஐந்து அப்பங்களை 5000 பேருக்கு வயிறார உண்ணக் கொடுத்து விட்டு, 12 கூடையில் மீதி அப்பத்தைச் சேகரித்தார் என்றும் படித்து வியப்படைகிறோம் (யோ 6:4-14). 10 தொழுநோயாளர்களை ஒரே வார்த்தையால் குணமாக்கினார் என்றும், மரித்த இலாசரை நான்காம் நாள் ஒரே வார்த்தையால் உயிர்பெறச் செய்தார் என்றும் நாம் ஆச்சரியப்படுகிறோம். அதே இயேசுதான் இன்று நமக்கு ஆன்மீக உணவாக தன் உடலையும், இரத்தத்தையும் தருகின்றார்.
“இது விண்ணிலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை யாராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்... உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் மானிட மகனுடைய சதையை உண்டு, அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள். எனது சதையை உண்டு, என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு, எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர். நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்" (யோ 6:51-57). நற்கருணை புதுமைகள் யாவும் இயேசு கூறிய வார்த்தைகள் உண்மையிலும், உண்மை என்று எண்பிக்கின்றன.
அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்? முதலில் நற்கருணையில் இயேசு உண்மையாகவே பிரசன்னமாயிருக்கிறார் என்று அறிந்த நாம் தினமும் திருப்பலியில் முழு ஈடுபாடுடன் பங்கேற்று நற்கருணை நாதரை உண்ண வேண்டும்.
இரண்டாவதாக நற்கருணை நாதரை அடிக்கடிச் சந்தித்து, உறவாடி, நெருங்கிய உறவு கொள்ள அவரோடு, அவரில், அவருக்காக வாழ முயற்சிக்க வேண்டும்.
மூன்றாவதாக நற்கருணை நாதருக்குச் செய்யப்படும், நிந்தை அவமானங்களுக்கு பரிகாரம் செய்ய, அவருக்கு ஆறுதல் கொடுக்க ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரமாவது திவ்ய நற்கருணை ஆராதனை செய்ய முடிவு செய்ய வேண்டும். (மாற் 14: 37-38)
இறுதியாக, நாம் பெற்ற பேறு, பெறுக இவ்வையகம் என்று நாம் படித்த இந்த நூலையும், பார்த்து ரசித்த குறுந்தகட்டையும் பிறருக்குக் கொடுத்து, இறையரசு அன்பின் அரசு, அமைதியின் அரசு, மகிழ்ச்சியின் அரசு, வளமையின் அரசு. ஒற்றுமையின் அரசு உலகில் ஓங்கி வளர துணை புரிய வேண்டும்.
நன்றி
-அருள்தந்தை ஜோனத்தன் கப்புச்சின்