அலாட்ரி, இத்தாலி 1228

அலாட்ரியில் உள்ள திருத்தூதரான புனித பவுல் பேராலயத்தில், "மனுவுருவான இயேசுவின் திருவுடலை" இன்றும் காணலாம். 

1228 ஆம் ஆண்டில் ஒரு கத்தோலிக்கப் பெண், நற்கருணையை வாங்கிய பிறகு, உண்ணாமல், ஒரு துணியில் சுற்றித் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றாள். காரணம் ஒரு மந்திரகாரியின் ஆலோசனைப் படி, நற்கருணையைக் கொண்டுவந்தால் அவளுக்கும், அவள் கணவருக்கும் இருக்கும் பூசலை தீர்த்து விடலாம் என்று எண்ணினாள். 

ஆனால் வீட்டிற்கு எடுத்து வந்த நற்கருணையைத் திறந்து பார்த்தபோது, அது இயேசுவின் தசையாக மாறி விட்டதைக் கண்டு அதிர்ச்சியுற்றாள். இந்த நிகழ்வு பற்றி மார்ச் 13, 1228 ஆம் ஆண்டு திருத்தந்தை 9 ஆம் கிரகோரி, FRATERNITAS TUAE என்ற திருத்தந்தையின் அதிகாரப்பூர்வமான ஆவணத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. 

அலாட்ரி ஆயருக்கு திருத்தந்தை எழுதியுள்ள இம்மடலில், 'முதலாவது, எல்லாம் வல்ல இறைவன் மீண்டும் மீண்டும் புதுமைகளும், அற்புதங்களையும் செய்து, பாவிகள் மனம் திரும்பவும், மதவிரோதிகள் குழப்பம் அடையவும், விசுவாசிகள் நம்பிக்கையில் வளரவும் செய்தமைக்கு நன்றி கூறுகிறேன். தவறு செய்த பெண் மனம் மாறியதால் சிறிய தண்டனையைக் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அவளுக்குத் தீய ஆலோசனைக் கொடுத்தப் பெண் ஆயரிடம் சென்று பாவ அறிக்கையிட வேண்டும். அவள் செய்த குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை நீரே தீர்மானிக்கும்படி உம் தீர்ப்புக்கு விட்டு விடுகிறேன். 

இந்தப் புதுமை நடந்து 750 ஆண்டு நினைவுச் சின்னமானது வெளியிடப்பட்டது. அந்தச் சின்னத்தில் ஒரு பக்கம் 9 ஆம் கிரகோரியாரின் உருவமும், மறுபக்கம் திருத்தூதர் புனிதபவுல் பேராலயமும் அச்சிடப்பட்டுள்ளது.