புனித சிறுமலர் தெரேசா

புனித சிறுமலர் தெரேசா 1873-1897 (திருநாள் அக்டோபர் 1)

பிரான்ஸ் நாட்டில் அலன்சோ என்ற ஊரில் லூயிஸ் மார்ட்டின், செலின் என்ற பெற்றோருக்கு ஒன்பதாவது பிள்ளையாகப் பிறந்தாள் சிறுமலர் தெரேசா!

தமது மூத்த சகோதரிகள் நால்வரைப் போல் கார்மேல் மடத்தில் சேர்ந்து இறைவனுக்கு ஊழியம் புரிய விரும்பினாள். ஆனால் இவருக்கு 15 வயது ஆன போதிலும் ஆயர் இவர் கார்மேல் சபையில் சேர அனுமதி மறுத்துவிட்டார். லூயிஸ் தெராசாவை உரோமைக்கு அழைத்து சென்றார். திருத்தந்தை 13 ஆம் சிங்கராயர் இவர் 15 வயது முடிந்ததும் கார்மேல் மடத்தில் சேர உத்தரவு கொடுத்தார். இவள் மடத்தில் சேர்ந்தது முதல் அன்பு, தாழ்ச்சி, இறை நம்பிக்கை, பரித்தியாகம் போன்ற புண்ணியங்களில் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வந்தாள். துறவற வாழ்வில் ஒன்பது ஆண்டுகளே இறைப்பணி ஆற்றிய போதிலும் ஆண்டவருக்காகச் சொல்லற்கரிய சிலுவைகளை மிகுந்த பொருமையோடும், மகிழ்வோடும், மனவலிமையோடும் சுமந்து வந்தார். 

நாம் அனுபவிக்கும் வேதனைகள் பாவிகளை மீட்கும் ஆற்றல் நிறைந்தவைகளாக இருக்க முடியும் என்பதை உணர்ந்தவளாய் பிரான்சினி என்ற கொலைகாரன் மனமாற கடுந்தவ முயற்சிகளையும், ஜெபங்களையும் அவன் மனம் மாறும்படியாக ஒப்புக்கொடுத்தாள். பிரான்சினியின் தூக்குத் தண்டனை நாள் வந்தது. அவன் தூக்குமேடையில் ஏறிய போது ஒரு கப்புச்சின் குருவானவர் அவனுக்கு ஒரு பாடுபட்ட சிலுவையைக் காண்பித்தார். அவனும் சுருபத்தை வாங்கி முத்தமிட பிறகு தூக்குதண்டனையை ஏற்றான். தனது ஜெப தபம் பலனளித்ததை எண்ணி தெரோசா ஆண்டவருக்கு நன்றி கூறினாள். "நான் கார்மேல் சபையில் சேர்ந்தது ஆன்மாக்களை மீட்கவும் குருக்களுக்காக மன்றாடவுமே" என்று கூறுவாள். புதுநன்மை வாங்கிய பொழுது, "இயேசு எனக்கு அன்பு முத்தமளித்தார். நானும் உம்மை நேசிக்கிறேன். என்னையே முழுமையாக உமக்கு அர்ப்பணிக்கிறேன்" என்று சொல்லுவாள். 

நற்கருணை நாதருக்குச் சிறு சிறு பரித்தியாகங்களையும், ஜெபங்களையும் சிறுமலர் தினமும் காணிக்கையாகத் தருவாள். அவள் ஒரு வேத போதக மிஷினரியாக பல நாடுகளுக்கு சென்று பணிபுரிய மிக ஆவலாய் இருந்தார். ஆனால் அது நிறைவேறாது என்று அறிந்த அவள் சிறுதவ முயற்சிகளையும், ஜெபங்களையும் தினமும் பாவிகள் மனம் திரும்பவும், மிஷினரி குருக்கள் வேதபோதகப் பணி பலன் தரவும் ஒப்புக் கொடுப்பாள். காச நோயால் பிடிபட்டு தனது 24 வது வயதிலேயே இறைவனடி சேர்ந்தாள். புனித தொரோசாவை இறையியல் வல்லுனராகவும், வேதபோதக நாடுகளின் பாதுகாவலியாகவும் திருச்சபை பிரகடனம் செய்தது.