தூய ஆவியாரும் இறைமகனும்

தூய ஆவியார் இறைமகன் இயேசுவின் மனித அவதாரத்தில் பிரசன்னமாய் இருந்ததுபோல் அவருடைய திருமுழுக்கின் போது பிரசன்னமாகிறார். யோர்தானில் இயேசு திருமுழுக்குப் பெற்ற போது வானம் திறந்ததையும் கடவுளின் ஆவியார் புறா உருவிலே இறங்குவதையும் யோவான் கண்டார் (மத்.3:16) " என் அன்பார்ந்த மைந்தர் இவரே இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்"என்று தந்தை கூறுகிறார். இங்கு மூவொரு கடவுளின் வெளிப்பாட்டை அறிகிறோம் (Theophany). 

கிறிஸ்துவின் பணி வாழ்வு துவங்கும் முன், அலகையினால் சோதிக்கப்படுமாறு பாழ்வெளிக்குத் தூய ஆவியாரால் அழைத்து செல்லப்பட்டார் (மத்.4:1) பணி வாழ்வை ஆரம்பிக்கும் போது 'ஆண்டவரின் ஆவி என்மேல் உள்ளது ஏனெனில் அவர் எனக்கு அருட்பொழிவு செய்துள்ளார். 

ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள் தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பினார்" (லூக் 4:18-19) என்று இயேசு அறிவித்தார். 

தந்தையின் மீட்புத் திட்டத்தை நிறைவேற்றும் ஒவ்வொறு கட்டத்திலும் இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு வழி நடத்தப்படுகிறார். புனித பேதுரு, "கடவுள் அவரோடு இருந்தால் அலகையின் கொடுமைக்கு உட்படுத்திருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார்" என்கிறார் (தி.பா. 10:38)

இயேசுவின் போதனையிலும் சாதனையிலும் தூய ஆவியார் வல்லமையோடு செயல்பட்டார் என்று நற்செய்தி கூறுகிறது (மத். 7:29; லூக். 8:24-25). "விண்ணுலகிலிருந்து வருபவர் அனைவருக்கும் மேலானவர் கடவுளால் அனுப்பப்பட்வர் கடவுளின் வார்த்தைகளை பேசுகிறார் கடவுள் அவருக்கு தம் ஆவிக்குரிய கொடைகளை அளவின்றிக் கொடுக்கிறார்" என திருமுழுக்கு யோவான் சான்று பகர்கிறார் (யோவா. 3:31-34)

பெந்தகோஸ்தே திருநாளின் போது தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்ட பேதுரு "நான் கூறுவதைக் கேளுங்கள் வல்ல செயல்கள். அற்புதங்கள் அருங்குறிகளால் நாசரேத்து இயேசு கடவுளது சான்று பெற்றவராக உங்கள் முன் எண்பிக்கப் பெற்றார். 

ஏனெனில் நீங்கள் அறிந்திருப்பது போல் இவற்றை எல்லாம் உங்கள் நடுவில் கடவுளே அவர் வழியாகச் செய்தார். கடவுளோ அவரை மரண வேதனைகளினின்று விடுவித்து உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள் அவர் கடவுளின் வலப்பக்கத்துக்கு உயர்த்தப்பட்டு வாக்களிக்கப்பட்ட தூய ஆவியான தந்தையிடமிருந்து பெற்றுப் பொழிந்தருளினார். நீங்கள் காண்பதும் கேட்பதும் இதுதான்" (தி.ப. 2:22-23) இவ்விதம் தூய ஆவியார் இயேசுவின் மரணத்திலும், உயிர்பிலும் செயலாற்றினார் என்று சாட்சி கூறுகிறார்.