புனித ஜெம்மா கல்கானி

புனித ஜெம்மா கல்கானி 1878-1903 (திருநாள் ஏப்ரல் 11, மருந்தகத்தின் பாதுகாவலி)

அவ்ரேலியாவின் தவப்புதல்வி ஜெம்மா. சிறு வயதிலேயே ஜெம்மாவுக்கு இயேசுவைப் பற்றிப் பல வரலாற்று உண்மைகளைச் சொல்லித் தந்தாள். இயேசுவே ஜெம்மாவுக்குத் தன்னைப்பற்றி சொல்லித் தருவார் என்று கூறி வந்த ஜெம்மா மிகவும் ஆவலாயிருந்தார். அந்த ஏக்கத்திலேயே நோயுற்றாள். பங்குக் குரு அவள் ஆவலைப்பார்த்து நற்கருணை நாதரைப்பற்றி அவள் நன்றாக அறிந்திருப்பதைப் பார்த்து புதுநன்மை வழங்கினார். புதுநன்மை வாங்கும் போது மணவாட்டி போல் வெள்ளை உடுப்பு போட்டு, கிரீடம் தரித்து இயேசுவைத் தன் மணவாளனாக ஜெம்மா ஏற்றுக் கொண்டாள்.

நற்கருணை மேல் அதிக பக்தி கொண்டிருந்த ஜெம்மா இயேசு போலவே தூய்மையாக வாழவும் தன்னையே முழுமையாக ஒப்புக் கொடுத்தாள். இயேசுவோடு உரையாடுவாள். தன்னுடைய துன்பங்களை எல்லாம் இயேசுவுக்காக ஏற்றுக் கொள்வாள். ஒருமுறை அவள் அதிகமாக நோயுற்ற போது இயேசுவிடம் தன்னைக் குணமாக்கும் படி உருக்கமாக ஜெபித்தாள். அதன்படியே இயேசு அவளை அற்புதமாக குணமாக்கினார். ஆகவே, அவள் மருந்தகத்திற்குப் பாதுகாவலியாக அறிவிக்கப்பட்டாள். 

புதுநன்மை வாங்கும் சிறுவர்கள் அவரிடம் மறைக்கல்வி கற்பதற்காக வருவார்கள். அவளும் மிக ஆர்வத்துடன் அவர்களுக்கு நற்கருணை நாதரைப் பற்றிக் கூறுவாள். இரவிலே அடிக்கடி எழுந்திருந்து மறுநாள் திருப்பலியில் வரப்போகும் நற்கருணை நாதரை எண்ணிப் பரவசமடைவாள். 

"இயேசுவே நான் உம்மை நாவிலே வாங்கும் போது நீர் கசப்பான காடியை சுவைத்தது போல் நானும் கசப்பை உணரச் செய்தருளும். உம் திருவுடல் என் உடலோடு ஒன்றிக்கும் போது உம் பாடுகளை நானும் அனுபவிக்க அருள் தாரும். உம் சிரசு என் சிரசில் சாயும் போது உம் முள்முடி வேதனையை நானும் பெறும்படி செய்யும். என் இதயம் உம் இதயத்தோடு இணையும் போது உம் இதயம் ஈட்டியால் குத்தப்பட்ட போது நீர் பட்ட வேதனையை நானும் அனுபவிக்க அருள் தாரும்" என்று மன்றாடுவாள். 

ஆகவே, இயேசு அவளுக்கு ஐந்து காய வரத்தைத் தந்தார். அவள் நற்கருணை நாதர் மேல் வைத்திருந்த அளவற்ற அன்பால் "நற்கருணையின் மாணிக்கம் என்று புகழப்பட்டாள். ஆண்டவர் அவளுக்குப் பல அருங்கொடைகளையும், ஆற்றல்களையும் கொடுத்து மகிமைப் படுத்தினார்.