பிளானோ, பிரான்ஸ் 1331

பிரான்ஸ் நாட்டில் பிளானோ (Blanot) என்ற சிற்றூரில் அருட்தந்தை யூஜ் (Fr. Huguis) 31.3.1331 உயிர்ப்புப் பெருவிழா திருப்பலியை நிறைவேற்றினார் (Blanot, France). 

அன்று (Thomas Calhiot, Guyot Besson) தாமஸ் கையோ, கியோத் பெஸ்ஸான் என்ற இருவர் திருப்பலிக்கு உதவி செய்தனர். 

அக்காலத்தில், மக்கள் பீடத்தைச் சுற்றியுள்ள நற்கருணை கிராதியில் (Communion Rails) மண்டியிட்டு, கிராதியில் போடப்பட்டுள்ள வெள்ளை துணிக்கடியில் இரு கைகளையும் வைத்து (நற்கருணை தரையில் விழாதபடி) நாவு நீட்டி நற்கருணை வாங்கும் வழக்கம் இருந்தது. 

அப்படியே அனைவரும் நற்கருணை வாங்கிச் சென்றபோது ஷக்கெட் என்ற விதவைக்கு குரு நற்கருணை கொடுத்தபோது, நற்கருணை அவள் நாவிலிருந்து நழுவி, கிராதியில் உள்ள வெள்ளைத் துணியில் விழுந்து விட்டது. 

பீடச்சிறுவர்கள் இதை குருவிடம் சொல்ல அவரும் உடனே அங்கு வந்து பார்த்தபோது அங்கு நற்கருணைக்குப் பதிலாக இரத்தக் கறை படிந்த துணியைக் கண்டார். 

ஆகவே, பூசை முடிந்ததும், இரத்தக்கறை படிந்திருந்த துணியை எடுத்துச் சென்று, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றித் துணியைக் கழுவினார். ஆனால் இரத்தக் கறை படிந்திருந்த துணியில் இரத்தக்கறை மறையாது, மேலும் பெரிதாகப் பரவியது. 

எனவே இரத்தக்கறை படிந்த அந்தத் துணியை வெட்டி எடுத்து, நற்கருணைப் பேழையில் வைத்து விட்டார். 

15 நாட்கள் கழித்து, ஆன்டுன் (Andun) என்ற மறைமாவட்ட ஆய்வாளர், ஜுன் ஜெரோசே, திருச்சபைச் சட்டப்படி ஆய்வு செய்து, இது உண்மையாகவே மனித இரத்தக்கறை தான் என்பதை, பேராயர் பெராக் பெட்ராண்டுக்குத் தெரிவித்தார். 

இந்த ஆய்வின் முடிவைத் திருத்தந்தை 22 ஆம் ஜானுக்குப் பேராயர் அனுப்பி வைத்தார். 

அந்த உயிர்ப்புத் திருநாளில் 31.3.1331 இல் வசீகரம் பண்ணப்பட்ட நற்கருணை 375 ஆண்டுகளாகியும் இன்றும் அழியாமல், கொஞ்சமும் கெட்டுப்போகாமல் இருந்து வருகிறது. 

1706 ஆம் ஆண்டிலிருந்து நற்கருணை ஆடம்பர பவனி ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

பிரெஞ்சு புரட்சியின்போது, டிசம்பர் 27 ஆம் தேதி 1793 ஆம் ஆண்டு தீவிரவாதிகள், பிளானோ கோயிலைக் கொள்ளையடித்துச் சென்றனர். 

ஆனால் மிக அற்புதமாக நற்கருணைப் பேழையில் வைத்திருந்த நற்கருணையும், இரத்தக்கறை படிந்திருந்த புனித துணியும் அழியாமல் காப்பாற்றப்பட்டன என்பது அதிலும் ஆச்சரியமே! 

இன்று வரை பிளானோ கோயிலில், உயிர்ப்புத் திருநாளுக்கு அடுத்து வரும் திங்கட்கிழமை, புனிதத் துணி பொது மக்கள் வணக்கத்திற்காகவும், 375 ஆண்டுகள் அழியா நற்கருணையை ஆராதனை செய்யவும் மக்கள் கூட்டம் திரண்டு வருகிறது.