வாழ்த்துரை: அருள்தந்தை தம்புராஜ்

அருள்தந்தை தம்புராஜ் சே.ச.
தலைவர்
கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி தியான ஆசிரமம்,
சென்னை - 4

கத்தோலிக்கத் திருச்சபையில் உள்ள கருவூலத்தில், சிறப்பான, சீரான, செம்மையான, அதி உன்னதமான முத்து நற்கருணை ஆகும். இதுவே திருச்சபையின் ஊற்றும், - உச்சக்கட்டமுமாய் உள்ளது. இதன் அருமையையும் பெருமை யையும் உணராதவர்கள் தான், கத்தோலிக்கத் திருச்சபையை விட்டுத் தாவி, வெளியேறி மற்ற பிரிந்து போன சபைகளைத் தழுவுகிறார்கள் என்ற சோக நாடகம் நடந்தேறுவதை இன்று நாம் பார்க்கின்றோம்.

பலர் வெறும் சடங்குகளை மட்டும் மயான அமைதியோடு கடைப்பிடித்துவிட்டு. தங்கள் கடைமையை நிறைவேற்றி விட்டோம் என்று கூறி மற்ற நேரங்களில் தொலைக்காட்சி என்னும் மடமையான பெட்டியை (Idiot Box) ஆராதித்துத் தூபங்காட்டி அமைகின்றனர்.க்கம்

பக்தி முயற்சிகளில் மட்டும் பரவசமடைந்து, படித்துத் தெரிந்து, தியானித்து, அசைபோட்டு நம் தசையோடு ஒன்றித்து சங்கமமாகக் கூடிய திருச்சபையின் கொள்கைத்திரட்டு என்ற பொக்கிஷத்தை அறியாதவர்களாக இன்னும் இருக்கின்றார்கள் பல கத்தோலிக்கர்கள்.

மறைக்கல்வியில் ஆழமான, அழுத்தமான அறிவை வளர்க்காமல் இருப்பதால் தான் பல கத்தோலிக்கர்கள் வேறு சபைகளுக்குப் படையெடுக்கின்றனர். சில விவிலிய வரிகளை மனப்பாடம் செய்துவிட்டு, விவிலியத்தைத் தூக்கி உயரப்பிடித்து, அசைத்து, எனக்கு எல்லாம் தெரியும் என்று மேடையிலிருந்து கர்ஜிப்பதில் எந்த பயனும் இல்லை.

அருள் அடையாளங்கள் அனைத்தும் விவிலியத்திலிருந்து ஊற்றெடுக்கும், உயிர் தரும் சாதனங்கள் என்று உணர்ந்து, அதை வாழ்வில் வாழ்ந்து காட்டி உலகிற்கு உப்பாகவும், உயிராகவும், ஒளியாகவும், புளிப்பு மாவாகவும் திகழ்ந்தால் தான் நாம் உண்மையான கிறிஸ்தவர்களாக, உந்து சக்தி கொடுக்கும் இயேசுவின் சீடர்களாக இருக்க முடியும்.

அருள் அடையாளங்களின் ஊற்றாக, உன்னதமானதாக, மேலானதாக, மேன்மையானதாக, முத்தாய்ப்பாகத் திகழ்வது தான் நற்கருணை. இன்று இயேசு நம்மோடு இருக்கின்றார். வாழ்கின்றார் என்ற உண்மையை, நிச்சயத்தை அடித்துக் கூறும் அருள் அடையாளம் நற்கருணை. இது நம்மை உருமாற்றி மெருகேற்றும் அருள் அடையாளம். உயிரோட்டமாக, ஒப்பற்ற நிலையில் தொடர்ந்து புதுமைகளைச் சாதிக்கும் நற்கருணையைப் பற்றி ஆழமாக ஆய்வு செய்து, 'மகனே! மகளே! இதோ உன் சொத்து என்று கூறும் அளவில் இந்த அற்புதமான நூலை நமக்கு வழங்கியுள்ளார் அருள்தந்தை ஜோனத்தன் கப்புச்சின் அவர்கள்.

இந்த நூல் வெளிவரும் நேரம் நல்ல நேரம்! சரியான நேரம்! பாக்கியம் பெற்ற நேரம்! பாராட்டக்கூடிய நேரம்! பரவசமடைய வேண்டிய நேரம்! 'மறைக்கல்வி ஆண்டு' என்ற இந்த ஆண்டைத் தமிழக ஆயர்கள் அறிக்கையிட்டுள்ள இந்த நேரத்தில் இந்நூல் வெளிவருவது எவ்வளவு பொருத்தமாயிருக்கிறது, என்பதை நாம் சொல்லவும் வேண்டுமோ?

இந்நூலைப் படித்துத் தியானித்து அசைபோட்டு, உள்வாங்கி நாமனைவரும் நடமாடும் நற்கருணையாக உருமாறுவோம்! வாழ்க! வளர்க! அருள்தந்தை ஜோனத்தன் கப்புச்சின் அவர்களின் அருள்பணி, அரியபணி, அற்புதமான பணி!

இவண்,

அருள்தந்தை தம்புராஜ் சே.ச.

06.08.2011

ஆண்டவரின் உருமாற்றத் திருவிழா.