கரவாக்கா தெலா குரூஸ் 1231

புனித ஃபெர்டினாந்து அரசரின் வாழ்க்கை வரலாற்றுப் பேராசிரியர் அருட்திரு சோமோரா ஜையில்ஸ் அதிகாரப் பூர்வமாக எழுதியுள்ள ஆவணத்தின் படி 1231இல் ஸ்பெயின் நாட்டில் உள்ள கரவாக்கா என்ற ஊரில் ஒரு நற்கருணைப் புதுமை நடந்தது (Caravaca De La Cruz, Spain). 

டோன் ஜீனஸ் பேரஸ் கிரினேஸ் தெகுன்ஞா (DON GINES PEREZ CHIRINES DE CUNGA) என்ற மதபோதகர், முர்சியா என்ற மூர்ஸ் முகமதியர் நாட்டிற்குச் சென்று மதபோதகம் செய்தார். அவரைக் கைது செய்து செட் அபுசெட் என்ற மூர்ஸ் அரசனிடம் கொண்டு வந்தனர். 

அரசன் கிறிஸ்துவ மதத்தைப் பற்றி அறிந்து கொள்ள சில வினாக்களை எழுப்பினான். சிறப்பாகத் திருப்பலியைப் பற்றி அறிய ஆசைப் பட்டான். டோன் ஜீன்ஸ்போஸ் திருப்பலியைப் பற்றி எவ்வளவு விளக்கமாகப் போதித்தார் என்றால், அரசன் மிகவும் ஆர்வம் கொண்டவனாய், திருப்பலி நிறைவேற்றும்படி பணித்தான். 

திருப்பலி நிறைவேற்ற வேண்டிய திருப்பலிப் பொருட்கள் எதுவுமில்லை. ஆகவே அரசன் அடுத்த கிறிஸ்தவ நாடாகிய கயன்காவுக்கு ஆள் அனுப்பித் திருப்பலிக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு வரும்படி கட்டளையிட்டான். அதன்படியே திருப்பலிப் பொருட்கள் வந்ததும் டோன் ஜீனஸ் திருப்பலியை ஆரம்பித்தார். 

ஆனால், திருப்பலியின் போது, பாடுபட்ட சிலுவை இல்லாததைக் கண்டு மனம் குழம்பினார். அரசன் குரு ஏன் தயங்குகிறார் என்று விசாரித்தான். அந்தச் சமயத்தில் வானதூதர் இருவர் ஒரு பாடுபட்ட சிலுவையைப் பீடத்தின் மேல் வைத்தனர். 

குருவானவர் ஆண்டவருக்கு நன்றி சொல்லித் திருப்பலியைத் தொடர்ந்தார். “இது என் திருஉடல்" என்ற வசீகர வார்த்தையைக் குரு உச்சரித்து, நற்கருணையை உயர்த்திக் காட்டிய போது, அந்த முகமதிய மன்னன், நற்கருணைக்குப் பதிலாக, ஒரு அழகான குழந்தையை கண்டு ஆச்சரியமடைந்தான். 

திருப்பலி முடிந்தவுடன் அரசனும், அரசியும் திருமுழுக்குக் கொடுக்கும்படி மன்றாடினர். அரசன் வின்சென்ட் என்றும், அரசி எலினா என்றும் பெயருடன் திருமுழுக்குப் பெற்றனர். மார்ச் 3ஆம் தேதி 1231இல் திருமுழுக்கு பெற்றனர். அன்றிலிருந்து அந்த நாடு கரவாக்கா தெலா குரூஸ் என்று பெயர் பெற்றது.

கரவாக்கா தெலா குரூஸ் பொன்விழாக் கொண்டாடிய போது, திருத்தந்தை இந்த நகரை கிறிஸ்துவ உலகிலேயே மிகப் பெரிய புனித நகரங்களான சந்தியாகு தெ காம்பஸ்தெல்லா, சாண்தோ தொரிபியோ தெலிபானா, உரோம், எருசலேமுக்கு ஒத்த ஐந்தாவது நகராக அறிவிப்புச் செய்தார்.