பவுலடிகளார் நற்கருணை இறையியல்

கொரிந்திய கிறிஸ்தவர்களுக்கு இறை இயேசுவின் இறுதி இராவுணவு பற்றி (1கொரி. 11:17-34) எழுதும் பவுல் திருதூதர் மூன்று காரியங்களைப் பற்றிக் கோடிட்டுக் காட்டுகிறார். (அ) திருவிருந்தை தவறாகப் பயன்படுத்துவது (1 கொரி. 11:17-22) (ஆ) நற்கருணை ஓர் உண்மையான அருள் அடையாளம் (கொரி. 11:23- 26). (இ) தகுதியின்றி ஆண்டவரின் உடலை உண்டு இரத்தத்தைக் குடிப்போருக்கு பவுல் கொடுக்கும் எச்சரிக்கை (கொரி. 11:27-34).

அக்காலத்தில் கொரிந்திய கிறிஸ்தவர்கள் நற்கருணை திருவிருந்தின்போது அகாப்பே எனப்படும் சமூக விருந்தையும் இணைந்து கொண்டாடினர். ஆனால் அது நற்செய்தி கூறும் அன்பின் சமூக விருந்தை உண்டனர். இதனால் ஏழைகளுக்கும் அடிமைகளுக்கும் உணவில்லாமல் போனது. இது திருவிருந்தாகிய நற்கருணை விருந்தை அவமதிப்பதாகும். இந்தப் பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு நற்கருணை விருந்தில் பங்குபெற முடியாமல் செய்து விடுகிறது. ஏனெனில், நற்கருணை விருந்தில் தகுதியுடன் பங்கு கொள்ள விரும்புகிறவர்கள் தன் சகோதரனைப் புறக்கணிக்கும் போது அவன் ஆண்டவரின் உடலுக்கும், இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறான். கிறிஸ்தவ சமூகத்திற்கு எதிராக குற்றம் புரிகிறான் (1கொரி. 11:27). ஆகவே, நற்கருணை விருந்தில் பங்கு கொள்பவர் தூய உள்ளத்துடன் பங்கு கொள்ளாவிட்டால் அவருக்குப் பதிலாக ஆண்டவரின் சாபத்தையே பெற்றுக்கொள்கிறான். (1 கொரி. 11:29). நற்கருணை விருந்து கிறிஸ்துவின் அன்பு விருந்து அங்குத் தன்னலத்திற்கோ, பிரிவினைக்கோ இடமில்லை. பவுலடிகள் பிறர் அன்பின்றி இறை அன்பு இருக்கமுடியாது என்பதையும் நற்கருணை சமூக உணர்வை வளர்க்கும் சமபந்தி என்பதையும் வலியுறுத்துகின்றார். அன்பின் சமூக உணவுக்கும், நற்கருணை விருந்திற்கும் உள்ள வித்தியாசத்தை வலியுறுத்தும் பவுல் நீங்கள் உண்டு குடிக்க வீடுகள் இல்லையா? என்று கொரிந்தியரைக் கேட்கிறார். முன்னையது உடலுக்கு தேவையானது பின்னையது ஆன்மாவிற்கு அவசியமானது. முன்னையது மனிதர் கொடுக்கும் உணவு: பின்னையது இறைவனே அளிக்கும் விருந்து. முன்னையது அளிந்து போகும் உணவு: பின்னையது வானினின்று வரும் வாழ்வுதரும் இயேசுவின் திருஉடல், திருஇரத்தம். ஆகவே, தக்க தயாரிப்பின்றி சகோதர அன்பின்றி இதில் கலந்து கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கின்றார்.

நற்கருணை விருந்து ஓர் அருட்சாதனம். இதை ஆண்டவரே தனக்கு வெளிப்படுத்தினார் என்று கூறும் பவுல் அப்படி நற்கருணை அருட்சாதனத்தை இயேசு இறுதி இராவுணவின் போது ஏற்படுத்தி னார் என்று தெளிவாக எடுத்துக் கூறுகின்றார். ஆண்டவராகிய இயேசு காட்டிக் கொடுக்கப்பட்ட அந்த இரவில் அப்பத்தை எடுத்து கடவுளுக்கு நன்றி கூறி அதைப்பிட்டு, "இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்றார். அப்படியே உணவு அருந்திய பின் கிண்ணத்தை எடுத்து, "இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைபடுத்தப்படும் புதிய உடன்படிக்கை நீங்கள் இதிலிருந்து பருகும்போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்" என்றார் (1கொரி. 11:23-25) இந்த இறுதி இராஉணவு ஓர் அருட்சாதனவிருந்து என்பதையும் பவுல் எடுத்துக் கூறுகின்றார். 

(அ) நற்கருணை இயேசுவின் மரணம் உயிர்ப்பில் பங்கெடுப்பதாகும். 

(ஆ) உயிருள்ள கடவுளுடன் செய்யப்படும் உடன்படிக்கை. ஏனெனில் இயேசு தன்னையே உணவாக உண்ணும் படி கையளிக்கிறார். 

(இ) இது இறுதியாக நிலைநாட்டப் போகும் மெசியாவின் அரசை முன் குறிப்பதாகும்.

இராவுணவில் பங்கெடுப்பதன் மூலம் இறைமக்கள் மீட்பராம் கிறிஸ்துவோடு ஒன்றிக்கின்றனர். (1கொரி. 10:16-17) இவ்வாறு இயேசுவின் திருவுடலை உண்டு திருஇரத்தத்தைக் குடிக்கும் போது சிலுவையில் மரித்து உயிர்த்த கிறிஸ்துவோடு ஓர் உடல் ஆகின்றனர். அதே சமயம் விசுவாசிகள் ஒருவர் ஒருவருடன் ஐக்கியமாகின்றனர் (1கொரி. 10:17). 

இவ்விதமாக திருச்சபை என்னும் கிறிஸ்துவின் மறையுடல் உருவாகிறது. அந்த மறையுடலுக்குக் கிறிஸ்துவே தலையாக உள்ளார். மற்றெல்லாரும் உறுப்புகளாய் உள்ளனர். கிறிஸ்துவின் பிரசன்னத்தை உலகிற்கு கொண்டு வர கிறிஸ்துவின் பிரதிநிதியாகிய குரு தேவை. ஆக நற்கருணை இன்றி திருச்சபை இல்லை, திருச்சபை இன்றி கிறிஸ்து இல்லை. கத்தோலிக்க திருச்சபையை நற்கருணைத் திருச்சபை என்று மறைந்த மாணிக்கம் இரண்டாம் ஜான்பால் பாப்பிறை கூறுகின்றார். 

கிறிஸ்துவின் இறைதிட்டத்தின்படி நற்கருணையையும் திருச்சபையும் ஒன்றை மற்றொன்று சார்ந்தும் ஒன்றுக்கு மற்றொன்று இன்றியமையாததாய் உள்ளன. கிறிஸ்துவின் மறை உடலை உருவாக்குவது கிறிஸ்துவின் நற்கருணைவிருந்தே! "நான் உங்களோடு இணைந்திருப்பது போல் நீங்களும் என்னோடு இணைந்திருங்கள்". கொடியும் திராட்சைச் செடியும் இணைந்திருப்பதுபோல் இயேசுவும் திருச்சபையும் ஒன்றாக இணைந்திருந்தனர். (யோவா :15:4) பவுலடிகளின் கூற்றுப்படி நற்கருணை அருட்சாதனம் கிறிஸ்தவ ஐக்கியத்தின் ஊற்றும், மையமும் மட்டுமல்ல திருச்சபையின் உள்ளுயிரே நற்கருணை தான்.

இவ்வளவு இணையற்ற நற்கருணை அருட்சாதனத்தில் பங்கெடுக்க விரும்புவோர் தகுந்த ஆயத்தத்துடன் அதைப் பெற வேண்டும் என்று பவுலடிகளார் கூறுகின்றார். முதலில் அவர்கள் ஆத்தும சோதனை செய்யவேண்டும் என்கிறார் (1கொரி.11:31). இரண்டாவதாக தூய உள்ளத்துடன் வாங்கவேண்டும், பாவத்துடன் வாங்குவது மேலும் தண்டனையையே கொண்டுவரும். ஆகவே தன்னலத்துடன் பிரிவினை மனப்பாங்கோடு மன்னிக்கும் மனமில்லாமல் நற்கருணையைப் பெறக்கூடாது இவ்வித ஆயத்தமின்றி வாங்குவதால் பலர் வலுவற்றோராயும், உடல் நலமற்றோராயும் இருக்கின்றனர் மற்றும் பலர் இறந்தும் விட்டனர் (1 கொரி.11:30) என்று அவர்களை எச்சரிக்கின்றார்.

இறுதியாக, ஒத்தமை நற்செய்தியும், பவுலடிகளார் கூற்றும் நற்கருணை புதிய ஏற்பாட்டின் பலியும் திருவிருந்தும் என்பதை எடுத்துரைக்கின்றன. பழைய பாஸ்காவை விட புதிய பாஸ்கா மேலானது. ஏனெனில், பழைய பாஸ்காவில் ஆட்டுக்குட்டி பலியிடப்பட்டு உண்ணப்பட்டது. ஆனால், புதிய பாஸ்காவாகிய கிறிஸ்துவே பலி செலுத்தும் குருவாகவும், பலி உணவாகவும் தன்னையே தருகிறார். சிறப்பாக உன்னத கடவுளே பிரசன்னமாகிறார். நற்கருணை இயேசு கிறிஸ்துவின் மறை உடலை உருவாக்கி அருள் வாழ்வில் நிலைத்திருக்கச் செய்கிறது. எனவே, நற்கருணை திருவிருந்தால் இறைபிரசன்னத்தால் வளம் பெற்ற இறைகுலம் தங்குதடையின்றி தம்மையே முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணமாக்கி இறை அரசை இவ்வுலகில் நிலைநாட்டுகிறது.