ஸ்பெயின் நாட்டில் 1300 ஆம் ஆண்டு ஓசெலரெய்னோ என்ற குடு ஊரில் புனித மரியா (Santa Maria) தேவாலயத்தில் திருப்பலியின் போது, அப்பம் இயேசுவின் உடலாகவும், இரசம் அவருடைய திருஇரத்தமாகவும் மாறிய புதுமைக்குப் பல சான்றிதழ்கள் உள்ளன (O'celereino, Spain).
அருட்திரு யேபஸ் அறிக்கைப்படி, 1487-ல் எட்டாம் இன்னசென்ட் என்ற திருத்தந்தையின் ஆவணம், 1497இல் ஏழாம் அலைக்சாண்தர் என்ற திருத்தந்தையின் ஆவணம் உண்மைப் புதுமையை உறுதி செய்கின்றன.
1300 ஆம் ஆண்டு மிகக் கடும் குளிர் நாளில் ஆசீர்வாதப்பர் சபையைச் சார்ந்த குருவானவர் புனித மரியா தேவாலயத்தில் திருப்பலி நிறைவேற்றினார். இந்த உறைபனி குளிரில் யாரும் திருப்பலிக்கு வரமாட்டார்கள் என்று குரு எண்ணினார்.
ஆனால், ஜுவான் சாண்டின் என்ற உழவர் பர்க்சமோயர் (BURXAMAJOR) என்ற ஊரிலிருந்து வந்திருந்தார். இயேசுவின் இறைப் பிரசன்னத்தில் நம்பிக்கை இல்லாத குரு. “இது என் சரீரம், இது என் இரத்தம்” என்ற வசீகர வார்த்தைகளை உச்சரித்த போது, அப்பம் இயேசுவின் திருஉடலாகவும், இரசம் இயேசுவின் திருஇரத்தமாகவும் மாறி; இரத்தம் வழிந்து நற்கருணைத் துணியில் (Corporal) சிந்தியதைக் கண்ட குரு அதிர்ச்சியுற்றார்.
திருப்பலி நிறைவேற்றிய குருவின் சந்தேகத்தைப் போக்கவும், உழவனின் விசுவாசத்தை உறுதி செய்யவும் இயேசு இந்தப் புதுமையைச் செய்தார். 200 ஆண்டுகளாக இந்த அழியா திருஇரத்தம் பீடத்திலேயே வைக்கப்பட்டிருந்தது.
இஸபெல்லா அரசி ஓசெப்ரெல்ரோவுக்கு வந்தபோது, இந்தப் புனிதப் பண்டத்தை அனைவரும் காணும்படியாக ஒரு நற்கருணைப் பேழையில் வைக்கும்படி ஏற்பாடு செய்தாள்.
அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15 ஆம் தேதியும், செப். 8ஆம் தேதியும் புனிதப் பண்டம் ஆடம்பரமாகப் பவனியில் எடுத்துச் செல்லப்படுகிறது.