நற்கருணை உண்மையிலே மாபெரும் மறைபொருள். அது வானம் போல் பரந்து, கோபுரம் போல் உயர்ந்து. கடல் போல் ஆழ்ந்தது. அம்மறை பொருளை எவரும் ஒருபோதும் முற்றிலுமாக உணரவே முடியாது. இயேசு கூறிய வார்த்தைகளின் அடிப்படையில் தூய ஆவியின் துணையோடு விசுவாகக் கோட்பாடாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நற்கருணையைப் பற்றிய முக்கியமான மூன்று உண்மைகளைத் திருச்சபை சட்டம் 897 பின் வருமாறு எடுத்துரைக்கின்றன. மிகவும் வணக்கத்திற்குரிய அருளடையாளம் போற்றுதலுக்குரிய நற்கருணையாகும். இதில் ஆண்டவராகிய கிறிஸ்து பிரசன்னமாயிருக்கிறார். பலியாக ஒப்புக் கொடுக்கப்படுகிறார். உணவாக உட்கொள்ளப்படுகிறார். எனவே நற்கருணை ஒரு பிரசன்னம், நற்கருணை ஒரு திருப்பலி, நற்கருணை ஒரு திருவிருந்து.
1. திருப்பிரசன்னம்
நற்கருணை ஒரு திருப்பலி, திருவிருந்து என உண்மைகளும் நாம் பார்த்துவிட்டோம் நற்கருணை ஒரு திருப்பிரசன்னம் என்ற உண்மையில் ஊன்றியுள்ளன. ஏனெனில், நற்கருணையில் கிறிஸ்து மெய்யாகவே பிரசன்னமாயில்லை யென்றால். அதில் அவரைத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கவோ அல்லது திருவிருந்தாக உட்கொள்ளவோ இயலாது. எனவே, இங்கு நற்கருணை ஒரு திருப்பிரசன்னம் என்பதை விளக்குவோம்.
2. பல்வேறு பிரசன்னம்
இறைவன் பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்துள்ளார். "மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது. "என்றும் ஏசையா இறைவாக்குரைக்கின்றார் (ஏசா. 6:3) " நான் வானகத்திற்கு ஏறிச்சென்றாலும் நீர் அங்கே இருக்கின்றீர். பாதாளத்தில் படுக்கையை அமைத்துக் கொண்டாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர்" என்று (திருப்பாடல் 139:8) கூறுகிறது. பல்வேறு பிரசன்னத்தை பற்றி இரண்டாம் வத்திக்கான் சங்கம் தெளிவாகக் கூறியுள்ளது ( திருவழிபாடு 7) முதலாவது அவர் பெயரால் ஒன்று கூடியிருக்கும் திருக்கூட்டத்தில் பிரசன்னமாய் இருக்கிறார் (மத். 18:20). இரண்டாவதாக, அவர் தம் திருப்பணியாளர்களிடத்தில் பிரசன்னமாய் இருக்கிறார். குறிப்பாக நற்கருணை திருப்பலியின் போது குருக்கள் கிறிஸ்துவின் ஆளுமையில் "இது என் உடல் இது என் இரத்தம்" என்கிறார். மூன்றாவதாக அவர் தம் வார்த்தையில் பிரசன்னமாய் இருக்கிறார். ஏனெனில் திருச்சபையில் திருமறை நூல் வாசிக்கும் போது அவரே பேசுகிறார். இறுதியாக ஒப்புயர்வற்ற வகையில் பொருள் தன்மையில் இடையறாது நற்கருணையில் அவர் மெய்யாகவே பிரசன்னமாய் இருக்கிறார்.
3. மெய்பிரசன்னம்
நற்கருணையில் முழுக்கிறிஸ்து உண்மையில் (Really) மெய்யாகவே பொருள் தன்மையில் (Substantially) பிரசன்னமாய் இருக்கிறார் என்று அறிக்கையிட்டுள்ளது 'தீரிதெந்தீன்' பொதுச்சங்கம் (Council of Trent 1545-1663) நற்கருணையில் கிறிஸ்துவின் பிரசன்னத்தை மெய்பிரசன்னம் என்றழைப்பதால் அவருடைய மற்றப் பிரசன்னங்களை நாம் மறுப்பதில்லை அல்லது குறைவாக மதிப்பீடு செய்வதில்லை. ஆனால் நற்கருணை பிரசன்னம் பொருள் தன்மையான பிரசன்னம் நற்கருணையில் கடவுளும் மனிதனுமான கிறிஸ்து கிறிஸ்து முழுமையாகவும் முழுவதுமாகவும் மெய்யாகவே தன்னையே தன்னையே பிரசன்ன மாக்குகின்றார்.
அப்பமும், இரசமும் குரு வசீகர வார்த்தைகளை உச்சரிக்கும் போது கிறிஸ்துவினுடைய உடலாகவும் இரத்தமாகவும் மாறுகின்றன. இம்மாற்றத்தைக் கத்தோலிக்க திருச்சபை பொருள் மாற்றம் (Transubstantiation) என்று சரியாகவும் பொருத்தமாகவும் அழைக்கின்றது. நற்கருணையில் இயேசுகிறிஸ்து மெய்யாகவே பிரசன்னமாய் இருக்கிறார் என்பதுதான் விசுவாசக் கோட்பாடு.
நற்கருணைப் பிரசன்னம் 'வசீகரத்தின்' போது (Consecration) ஆரம்பமாகிறது. அப்ப, இரச குணங்கள் நீடிக்கும் வரை நற்கருணை பிரசன்னமும் நீடிக்கிறது. நற்கருணையில் முழுக்கிறிஸ்து இருக்கின்றார். அதுமட்டுமல்ல அவர் நற்கருணை முழுவதிலும் இருக்கின்றார். எனவே அப்பத்தைப் துண்டுகளாகப் பிட்டாலும் ஒவ்வொரு துண்டிலும் முழுகிறிஸ்து பிரசன்னமாயிருக்கிறார்.
4. ஆவியாரின் செயல்
திருப்பலியில் வசீகர வார்த்தைகளை உச்சரிக்கும் முன் குரு அப்ப இரச காணிக்கைகள் மீது கைகளை விரித்து, "ஆகவே உம்முடைய தூய ஆவியைப் பொழிந்து இக்காணிக்கையை புனிதப்படுத்த வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம். இவ்வாறு எங்கள் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் உடலும் இரத்தமுமாக இவை மாறுவனவாக." (நற்கருணை மன்றாட்டு 2) இம்மன்றாட்டு 'எப்பிக்கிளேசிஸ் (Epiclesis) என்று இலத்தீன் மொழியில் கூறப்படுகிறது.
இயேசுகிறிஸ்துவின் ஊன் உடல் (Physical Body) உருவானது தூய ஆவியின் ஆற்றலால். அன்னை மரியாள் ஆவியினால் கருவுற்று இயேசுவை ஈன்றெடுத்தாள் (லூக்.1:35) கிறிஸ்துவின் நற்கருணை உடல் (Eucharistic Body) உருவானது அதே தூய ஆவியின் ஆற்றலால் தான் என்பதை 'எப்பிக்கிளேசிஸ்' என்ற தூய ஆவியின் மன்றாட்டு உணர்த்துகிறது. அதே போல் திருச்சபை ருவானதும் தூய ஆவியின் வல்லமையால் தான் (தி.ப.2:1-14). இறைவா உம்முடைய மகனின் திருவுடல் திருஇரத்தத்தினால் ஊட்டம் பெறும் நாங்கள் கிறிஸ்துவுக்குள் ஒரே உடலும், ஒரே மனமும் உள்ளவராக விளங்கச் செய்வீராக" (நற்கருணை மன்றாட்டு 3).
5. இயேசுவே சொன்னார்
நற்கருணையில் இயேசுகிறிஸ்து மெய்யாகவே பிரசன்னமாய் இருக்கின்றார். நாம் விசுவசிக்கின்றோம். காரணம் இயேசுவே இந்த உண்மையை வெளிப்படுத்தினார். ஏனெனில் அவரே அப்பத்தை எடுத்து, 'இது என் உடல் என்றும்; திராட்சை ரசம் நிறைந்த கிண்ணத்தை எடுத்து இது என் இரத்தம்" என்று சொன்னார். இயேசு பொய் சொல்ல மாட்டார். உண்மையையே பேசினார். உண்மையாகவே தன் உயிரையும் கொடுத்தார். எனவே, இயேசுவே சொன்னார் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே நற்கருணையில் அவரின் மெய்பிரசன்னத்தை ஏற்று, விசுவாசித்து அறிக்கையிடுகிறோம்.
6. தூய பவுல்
"ஆண்டவரிடமிருந்து நான் எதை பெற்றுக் கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன்". என்ற பவுல் கொரிந்தியரைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்கிறார். "கடவுளைப் போற்றி திருவிருந்து கிண்ணத்திலிருந்து பருகிறோமே அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா? அப்பத்தை பிட்டு உண்ணுகிறோமே அது கிறிஸ்துவின் உடலில் பங்கு கொள்ளுதல் அல்லவா? " (1 கொரி. 10:16)
அப்பம் ஒன்றே ஆதலால் நாம் பலராயினும் ஒரே அப்பத்தில்தான் பங்கு கொள்கிறோம். என்று கிறிஸ்துவின் உடலில் நாம் உறுப்புக்கள் என்று கூறுகிறார் (1 கொரி. 12:12-13).