பழைய ஏற்பாட்டில் நற்கருணையைப் பற்றி சில முன் அறிகுறிகள் உள்ளன. எ.கா. மலாக்கி இறைவாக்கு, மெசியாவின் திருவிருந்து, விண்ணிலிருந்து வந்த 'மன்னா'. பலி இரத்தம் என்பவையாகும்.
1. மலாக்கி இறைவாக்கு (1:11)
இஸ்ராயேல் மக்கள் பிரமாணிக்கமற்ற மக்களாயிருந்தது மல்லாமல் குருடானவற்றையும், நொண்டியும், நோயுமாய்க் கிடந்தவற்றைப் (1:8) பலியிட்டனர். கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் வந்த மலாக்கி இறைவனின் அன்பு, இரக்கம், பராமரிப்பைச் சுட்டிக் காட்டி குருக்களின் நெறிகெட்ட நடத்தையையும், குறையுள்ள காணிக்கைகளையும் குறித்து எச்சரித்தார். "உங்கள் கையிலிருந்து காணிக்கை எதையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். கதிரவன் தோன்றும் திசை தொடங்கி மறையும் திசை வரை வேற்றினத்தா ரிடையே என் பெயர் புகழ் மிக்கது, எவ்விடத்திலும் என் பெயருக்குத் தூபமும், தூய காணிக்கையும் செலுத்தப்படுகின்றன. ஏனெனில் வேற்றினத்தாரிடையே என் பெயர் புகழ்மிக்கதே" என்கிறார் படைகளின் ஆண்டவர் (1:11).
இறைவாக்கினர் மலாக்கி லேவியரின் பலி அழிக்கப்பட்டு புதிய பலி(1:10) செலுத்தப்படும் என்று கூறினார். லேவியர் எருசலேமில் மட்டுமே பலி செலுத்தினார். (இ.ச.12:1-16) பிற இனத்தவர் அதில் பங்கெடுக்க முடியாது. (லேவி 20; 24; இ.ச. 7:1; வி.ப 34:12) ஆனால் மலாக்கிச் சுட்டிக் காட்டும் புதிய பலி மெசியாவின் காலத்தில் நிறைவேற்றப்படும். அது எல்லா இடத்திலும், எல்லா வேளையிலும் கதிரவன் தோன்றி மறையும் வரை அனைத்து மக்களிடையேயும் நிறைவேற்றப்படும் என்று இறைவாக்குரைக்கிறார். (மலா 4:1-11; செக் 8:20; ஏசை 2:2).
திருச்சபையின் திருத்தந்தையரும் (Fathers of Church) டிரன்டைன் பொதுச் சங்கமும் (Council of Trent) மலாக்கிக் கூறியது இயேசு கிறிஸ்து கூறியது இயேசு கிறிஸ்து நிறைவேற்றிய புதிய ஏற்பாட்டின் நற்கருணைப் பலியைத்தான் குறிக்கின்றது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.