இத்தாலியில் உள்ள ஃபிளாரன்ஸ் நகரில் புனித அம்புரோஸ் ஆலயம் உள்ளது (Florence, Italy).
அங்கு 1230லும், 1595லும் இரண்டு நற்கருணை புதுமைகள் நடந்தன.
அருட்தந்தை யுகுச்சியோனே டிசம்பர் 30, 1230இல் திருப்பலி நிறைவேற்றினார். அவர் திருப்பலி நிறைவேற்றிய பாத்திரத்தில் கொஞ்சம் திருஇரத்தம் தங்கிவிட்டதை உணரவில்லை.
மறுநாள் காலையில் திருப்பலிப் பாத்திரத்தில் திருஇரத்தம் கட்டியாக உறைந்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.
அதை அங்கிருந்த ஆயர், குருக்கள், கன்னியர், பொது மக்கள் யாவரும் கண்டனர்.
திருஇரத்தத்தைக் கண்ணாடிக் குப்பியில் வைத்து மக்கள் யாவரும் வணக்கம் செய்தனர்.
பாவியா ஆயர் ஆர்தின்கோ (ARDINGO) அந்தத் திருஇரத்தக் குப்பியைத் தன்னிடம் கொண்டு வரும்படி உத்தரவிட்டார்.
அதன்படியே ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆயர் சில காலம் வைத்திருந்து, புனித அம்புரோஸ் மடத்தில் பத்திரமாக வைக்கும்படிக் கொடுத்தார்.
1399இல் திருத்தந்தை ஒன்பதாம் போனிபாஸ், புனித பண்டத்துக்கு வணக்கம் செய்ய உத்தரவளித்தார்.
புதுமை நடந்து 750 ஆண்டுவிழா 1980இல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
1595இல் பெரிய வெள்ளி அன்று பீடத்திலிருந்த எரியும் திரி கீழே விழுந்து, தீப்பற்றியது.
மக்கள் உடனே தீயை அணைத்து, நற்கருணையையும், திருப்பலிப் பாத்திரத்தையும் காப்பாற்றினர்.
ஆறு நற்கருணை தவறிக் கீழே இருந்த எரியும் கம்பளத்தில் விழுந்துவிட்டன. ஆனால் நற்கருணைக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல், காப்பாற்றப் பட்டன.
1628இல் ஃபிளாரன்ஸ் பேராயர் மார்சியோ மெடிச்சி (Marzio Medici) அந்த ஆறு நற்கருணையையும் ஆராய்ச்சி செய்து, அவை கொஞ்சமும் கெடாமல் இருப்பதால் அவைகளைக் கதிர்பாத்திரத்தில் வைத்து முத்திரை இட்டார்.
ஆண்டுதோறும் மே மாதத்தில் 40 மணி நற்கருணை ஆராதனை செய்யும்போது, இந்த இரண்டு புனித பண்டங்களையும் வணக்கம் செய்து வருகின்றனர்.