BISHOP THOMAS AQUINAS
Bishop of Coimbatorera
"To live and share Christ"
Bishop's House, Post Bag No.6
Big Bazaar Street, Coimbatore-1
Tamilnadu, South India.
Tel : 0422-2390430, 2382806
Fax: 0422-2394530
Email: cbebishophouse@vsnl.com
Website: www.coimbatorediocese.com
"நற்கருணை... இயேசுவின் தெய்வ பிரசன்னம்
நற்கருணை... நாளும் தரும் தெய்வ தரிசனம்"
திருவழிபாட்டின் பாடல் வரிகளின் வார்த்தைகள்.
கட்டிடம் எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ அதற்கேற்ப அடித்தளம் அழகாக இருக்க வேண்டும். கிறிஸ்தவ வாழ்வு உயர்ந்ததாக இருக்க நமது அடிப்படை விசுவாசம் ஆழமாக, வேரூன்றியதாக இருக்க வேண்டும். கிறிஸ்தவ விசுவாசம், புனித பவுல் அடியார் சொல்வதைப்போல, உயிர்த்த ஆண்டவரில் நங்கூரம் கொண்டுள்ளது. உயிர்த்த ஆண்டவரை திருச்சபை நற்கருணையில் நிறைவாக காண்பதால் அதுவே திருச்சபையின் வாழ்வும் மையமுமாய் திகழ்கின்றது. வத்திகான் சங்க ஏடுகள் சொல்வது போல் நற்கருணை பலியில் உயிர்த்த ஆண்டவரை எம்மாவுஸ் சீடர்களை சந்தித்து போல இறைவார்த்தை என்ற உணவையும் நற்கருணை, என்ற உணவையும் ஒரே பீடத்திலிருந்து கிறிஸ்துவ விசுவாசிகள் பெறுகின்றனர்.
ஆக, கத்தோலிக்க திருச்சபையின் அடித்தளமே நற்கருணை தான். நற்கருணையைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கும் போது அது பரந்து விரிந்த, ஆழங்காண முடியா அதிசய மிக்க கடலைப் போன்றது. அள்ள அள்ள குறையாத அமுத சுரபி போன்று, நற்கருணை சிந்திக்க சிந்திக்க தெவிட்டாத சிந்தனைகளை தந்து கொண்டே இருக்கிறது.
கப்புச்சின் சபையை சார்ந்த ஜோனத்தன் அடிகளார் நற்கருணையை பற்றி எழுதியுள்ள இப்புத்தகம் தமிழக திருச்சபைக்கு புதுவரவு. நற்கருணையைப் பற்றிய ஆழ்ந்த கருத்துக்களை எளிய நடையில் எழுதியுள்ளார். இந்நூலின் பல இடங்களில் விவிலியத்தின் பழைய ஏற்பாடு நூல்களிலிருந்து பல பகுதிகளை சுட்டிக்காட்டியது நற்கருணையின் முன் அடையாளமாக அமைந்திருந்தன (எடுத்துக்காட்டாக மன்னா-வி.ப.16 ம் அதிகாரம்) என்பதை மேற்கோள் காட்டியிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று.
நற்கருணையை பற்றி இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள விருப்புகிற ஒவ்வொருவருக்கும் இந்நூல் பயனுள்ளதாக இருக்கும். சபைகள் புற்றீசல்களாக தோன்றி மக்களை உண்மை விசுவாசத்திலிருந்து வழிமாறச்செய்யும் இச்சூழலில் நற்கருணை மீது நம் விசுவாசம் குறையாது இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இப்புத்தகம் கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்நூலைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் என் ஆசியை வழங்குகிறேன்.
நம் இறைநெறி பிறழாமல் வாழக் கற்றுக்கொள்வோம். கலைமான் நீரோடையை ஆர்வமாய் நாடுதல் போல் என் ஆன்மா ஆண்டவரை ஆர்வமுடன் நாடுகிறது என்கிற சங்கீத ஆசிரியரின் வார்த்தைக்கேற்ப என்றும் நற்கருணை ஆண்டவரை நாடக் கற்றுக் கொள்வோம். மாறிவரும் உலகில் மாறாமல் இருப்பவர் இறைவன் ஒருவரே என்றுணர்ந்து அவரில் மையம் கொண்டு வாழும் போது நிறை வாழ்வை நோக்கி நம் வாழ்க்கைப் பயணம் சென்று கொண்டிருக்கும் என்று நாம் அறிந்து கொள்வோம். அதற்கு இந்நூல் கண்டிப்பாக துணைபுரியும் என்பது என் துணிவு. எல்லோரும் படித்து பயன் பெற வேண்டும் என்று ஆசிக்கிறேன்.
என்றும் அன்புடன்,
+தாமஸ் அக்குவினாஸ்
கோவை ஆயர்