புனித பதுவை அந்தோணியார் 1195-1231 (திருநாள் ஜூன் 13, மறைவல்லுநர்)
போர்ச்சுக்கல் நாட்டில் லிஸ்பன் நகரில் 1195 இல் பிறந்த இவர் தம் இறுதி நாட்களை இத்தாலி நாட்டின் பதுவை நகரில் செலவழித்து அங்கேயே மரித்தார். அதனால், பதுவை அந்தோணியார் என்று அழைக்கப்படுகிறார்.
போன்வில்லோ என்றவர் இயேசு நற்கருணையில் இல்லை என்றும் திருப்பலியில் சாதாரண அப்பம் அவர் திருஉடலாகவும், இரசம் திரு இரத்தமாகவும் மாறுவதில்லை என்றும் திருப்பலி எளிய மக்களை ஏமாற்றும் வித்தை என்றும் கூறி வந்தார். புனிதர் ஒரு நாள் போன்வில்லோவை நேரில் சந்தித்து, "நீ சவாரி செய்யும் கழுதை நற்கருணைக்கு முன் மண்டியிட்டு வணங்கினால் இயேசு கிறிஸ்து உண்மையாகிலும் நற்கருணையில் இருக்கிறார் என்ற விசுவாச சத்தியத்தை ஏற்றுக் கொள்வாயாக" என்று சவால் விட்டார். போன்வில்லோவும் சவாலை ஏற்றுக்கொண்டான்.
எல்லா மக்களையும் ஒன்று கூட்டிப் புனிதரை அவமானப்படுத்தத் திட்டமிட்டான். தன் கழுதையை இரண்டு நாள் எந்த உணவும் தண்ணீரும் கொடுக்காமல் பட்டினி போட்டான். மக்கள் எல்லாரும் திரண்டு வந்தனர். புனிதர் நற்கருணை கதிர் பாத்திரத்தை கையில் ஏந்தி வந்தார். இரண்டு நாள் பட்டினி கடந்த கழுதையை ஓட்டி வந்த போன்வில்லோ அதற்கு முன்பு புல்லைக் காட்டினான். கழுதையோ புல்லைச் சட்டைசெய்யாமல் நற்கருணைபக்கம் திரும்பி அதற்கு முன் மண்டியிட்டு வணங்கிற்று!
எல்லோரும் ஆச்சரியப்பட்டு மண்டியிட்டு நற்கருணை நாதரை ஆராதித்தனர். போன் வில்லோவும் மனம்மாறி நற்கருணையில் உண்மையாகிலும் இயேசு இருக்கிறார் என்ற சத்தியத்தை ஏற்றுக் கொண்டான். அன்று முதல் புனிதர் அந்தோணியார் புகழ் நாடெங்கும் பரவலாயிற்று. பல பிணியாளர்களைக் குணமாக்கினார். பேய்களை ஓட்டினார். நற்கருணை பக்தியை எல்லா ஊர்களிலும் பறைசாற்றி வந்தார்.
அவர் தனி ஜெபம் செய்து கொண்டிருக்கும் போது குழந்தை இயேசு அவர் கரத்தில் இறங்கி வந்து உரையாடினார். அவருக்கு முத்தமிட்டார். புனித அந்தோனியார் பரவசமானார். இதனால்தான் புனிதர் கரத்தில் குழந்தை இயேசு இருப்பதைக் காண்கிறோம். அவர் ஏழைகளுக்குச் சிறப்பாக அன்பு காட்டியதால் புனிதர் பெயரால் அந்தோணியார் ரொட்டி எல்லோருக்கும் வழங்கப்படுகிறது.
ஆகவே அவர் ஏழைகளின் பாதுகாவலர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் மறைவல்லுநர் என்று திருச்சபை அவரை மகிமைப்படுத்துகிறது. அவர் நற்செய்தியை எங்கும் பறைசாற்றி வந்ததால் இன்று அவர் நாவு மட்டும் அழியாமல் பதுவை நகர் திருத்தலத்தில் புனிதமாகப் போற்றப்பட்டு வருகிறது.