முன்னுரை: அருள்தந்தை ஜோனத்தன் கப்புச்சின்

எந்த மனிதனும் உயிர்த்தெழுந்தான் என்று வரலாறே இல்லை. ஆனால் இயேசு செய்த மிகப்பெரிய புதுமை அவரது உயிர்ப்பே! இயேசு, தான் முன்னுரைத்தபடியே மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தார் என்பது வரலாறு. மனிதன் என்ற முறையில் மரித்தார், கடவுள் என்ற முறையில் உயிர்த்தார். ஆகவேதான் உலக வரலாறே கிறிஸ்துவுக்கு முன் (கி.மு.). கிறிஸ்துவுக்கு பின் என்று (கி.பி.) பிரிக்கப்பட்டுள்ளது. இது எவ்வளவு உண்மை என்றால் உலக நாடுகள் அனைத்தும் இயேசு உயிர்த்த ஞாயிற்றுக் கிழமையை விடுமுறையாக கொண்டாடி வருகின்றன. “கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்றாலோ, உங்கள் விசுவாசம் வீணானதே” என்று பவுலடிகளார் 1 கொரி. 15:17ல் கூறியுள்ளார். நம் விசுவாசம் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பிலே தான் கட்டப்பட்டுள்ளது.

உயிர்ப்பையும்விட மேலான புதுமை உண்டோ? என்றால், ஆம் உண்டு. அதுவே நற்கருணை புதுமைகள். ஏனெனில், ஆண்டவர் இறுதி இரவு உணவின் போது, நற்கருணையை ஏற்படுத்தி, "இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்று தம் சீடர்களுக்கு கட்டளையும் கொடுத்தார். (மத். 26:26-28; லூக் 22:17-20; மாற் 14:22-24) நம்மோடு இயேசு இன்றும் நற்கருணையில் வாழ்கிறார். நம்மை வாழ வைக்கிறார். காலம் சென்ற புனித திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் கூறியதுபோல், "நற்கருணையின்றி திருச்சபை இல்லை, திருச்சபை இன்றி நற்கருணையில்லை என்பது முற்றிலும் உண்மையே! “இதோ, நான் உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்" (மத் 28:20) இயேசு கொடுத்த வாக்குறுதி இன்றும் நிறைவேறுகிறது.

நற்கருணையில் இயேசு மெய்யாகவே தம் உடலோடும், ஆன்மாவோடு, தசையுடனும், குருதியுடனும், மனிதத் தன்மையுடனும், இறைத்தன்மையுடனும் முழுமையாகவே இருக்கிறார் என்று கத்தோலிக்கத் திருச்சபை 2019 ஆண்டுகளாக போதித்து வருகிறது. (Council of Florence; Council of Trent, Vatican Council I and II) போன்ற திருச்சங்கங்கள் பலமுறை இந்த விசுவாசக் கோட்பாட்டை காலம் காலமாக வலியுறுத்தி வந்துள்ளன.

திருப்பலியின்போது திருப்பொழிவு செய்யப்பட்ட குருவானவர், அப்பத்தைக் கையில் எடுத்து. "இது என் உடல்” என்ற வசீகர வார்த்தையைச் சொல்லும்போது, அப்பம் இயேசுவின் திருவுடலா கவும். கிண்ணத்தை எடுத்து, "இது என் இரத்தம் என்று சொல்லும்போது, திராட்சை இரசம், இயேசுவின் திருஇரத்தமாகவும் மாறுகிறது. இதைத்தான் பொருள்மாற்றம் (Transubstantiation Change of Substance) என்று திருச்சபை படிப்பிக்கிறது. இது விசுவாசத்தின் மறைபொருள் என்று ஒவ்வொரு திருப்பலியிலும், அறிக்கையிடுகிறோம்! (யோ 6:41-58) இதை நாம் மனித அறிவால் அறிய முடியாது எனினும், நம் அறிவுக்கு முரணானது அல்ல. எடுத்துக்காட்டாக நாம் ஒரு பொருள், மற்றொரு பொருளாக மாறுவதைத் தினமும் காண்கிறோம். நாம் உண்ணும் உணவு இரத்தமாக மாறுகிறது. ஒரு தாய் உண்ணும் உணவு இரத்தமாக மாறி, தன் குழந்தைக்குத் தன் இரத்தத்தையே தாய்ப் பாலாகக் கொடுக்கிறாள். அந்தக் குழந்தை தாய்ப் பாலைக் குடிக்கும்போது அது மீண்டும் இரத்தமாக மாறுகிறது. இதுவே பொருள் மாற்றம்.

நற்கருணையில் இறைப்பிரசன்னம் தன்நிகரற்ற தனித்தன்மை கொண்டது (Unique Presence). எனவே நற்கருணை நம் ஆன்மீக வாழ்வின் நிறைவாகவும், மற்றனைத்து அருளடையாளங்களுக்கு ஊற்றாகவும் உள்ளது. நற்கருணை இயேசுவின் உண்மையான உடலாகவும், இரத்தமாகவும், ஆன்மாவாகவும், இறைத்தன்மையாகவும். நிறைவாகக் கொண்டுள்ளது என்று கத்தோலிக்க மறைக்கல்வி கூறுகிறது. (The Catechism of The Catholic Church para No 1374; Council of Florence; Council of Trent, Council of Vatican | & II; "Sacramentum Caritatis" of Pope Benedict XVI; "Mane Nobiscum Domine" of Pope John Paul II; "Ecclesia de Eucharistia" 1e Dar of Pope John Paul II).

இயேசுவின் மேல் விசுவாசமும், நற்கருணையில் அவருடைய உண்மை பிரசன்னத்தின் மீது நம்பிக்கையும், நாம் கொண்டிருக்க வேண்டிய அவசியம், இன்று இருப்பது போல் என்றுமே திருச்சபை வரலாற்றில் இருந்ததில்லை. இதே இயேசு தான் 2019 ஆண்டு களுக்கு முன் புதுமைகள் செய்தார். இதே இயேசு தான். நாம் அவர் வார்த்தையின் மேல் நம்பிக்கை வைத்தால் இன்றும் புதுமைகள் செய்கிறார். மேலும் செய்ய ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார். 2019 ஆண்டுகளுக்கு முன் கன்னி மரியாளின் உதரத்திலே மனுவுருவான அதே இயேசுதான். இன்றும் நற்கருணை வழியாக, நம் ஆன்மீக உணவாகத் தன்னை தன் உடலையும், தன் இரத்தத் தையும் தருகிறார் என்று மறைந்த மாணிக்கம் புனித திருத்தந்தை 2-ம் ஜான்பால் கூறுகிறார். "அன்று கன்னிமரியாளின் உதரத்திலே தமத்திருத்துவத்தின் இரண்டாமாளாகிய இயேசுவை உருவாக்கிய தூய ஆவியானவர் தான் இன்றும், அப்பத்தையும், திராட்சை இரசத்தையும் இயேசுவின் திருவுடலாகவும், திருஇரத்தமாகவும் மாற்றுகிறார்" - இறைவல்லுனர் அருட்திரு ஜான் A. ஹார்டன் S.J.

இந்தக் கத்தோலிக்கத் திருச்சபையின் கோட்பாடுகளை எதிர்த்தவர்கள், மார்டின் லூத்தர் (முன்னாள் அகஸ்டீனியன் துறவி) கால்வின், சுவிங்கிலி போன்றவர்கள். "நற்கருணையில் இயேசுவின் உண்மையான இறைபிரசன்னமில்லை” என்று போதித்தார்கள். இதனால் அதுவரை ஒரே கத்தோலிக்கத் திருச்சபையானது இரண்டாகப் பிளவு பட்டது. அன்றே Protestant Reformation ஆரம்பமானது. இந்த தப்பறையை எதிர்த்து உண்மை விசுவாசத்தை நிலைநாட்டியவர்கள் தான் புனித லொயோலா இஞ்ஞாசியாரும். இயேசு சபை குருக்களும் (Counter Reformation). மார்டின் லூத்தர். கால்வின் போதனைகள் மிக வேகமாக, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பரவியது. இந்த தப்பறையால் கத்தோலிக்கரும், பாதிப்புக்குள்ளானார்கள், விசுவாசத்தில் குழப்பமடைந்தனர், தடுமாறினர் தளர்ந்து போயினர்.

ஆனால் இயேசு உண்மையாகவே நற்கருணையில் உடலோடும், ஆன்மாவோடும் மனிதத் தன்மையோடும், இறைத் தன்மையோடும் முழுமையாகவே இருக்கிறார் என்ற கத்தோலிக்கக் கோட்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இந்த உண்மையை நிரூபிக்கவே, பல இடங்களில், பல நாடுகளில், பல காலகட்டத்தில் பல புதுமைகளையும், அதிசயங்களையும் இறைவன் செய்துள்ளார் என்பதே இந்த நூலின் கருப்பொருள். இவையாவும் கட்டுக் கதையோ கற்பனையோ அல்ல. Instituto San Clemente, papa et martire என்ற புனித முதலாம் கிளமெண்ட் என்ற திருத்தந்தையின் அதிகாரப் பூர்வமான கோப்புகளிலிருந்தும், புதுமைகள் நடந்த இடத்தின் தல ஆயர்களின், பேராயர்களின் ஆவணங்களிலிருந்தும், கல்வெட்டுகளிலிருந்தும் எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

'இன்று ஐரோப்பாவில் விசுவாசத் தளர்ச்சி மிகக் கண்கூடாக உள்ளது" என்று திருத்தந்தை 16-ம் பெனடிக்ட் மிக வருத்தப்ப டுகிறார். ஆகவே "இன்று விசுவாச மறுமலர்ச்சி, மறைக்கல்வி உடனடித் தேவை” என்று கூறுகிறார். ஐரோப்பாவில் கிறிஸ்துவ தேவாலயங்கள் இந்து கோயில்களாகவும், ஆஸ்ரமங்களாகவும், சினிமா தியேட்டர்களாகவும் அங்காடிகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. அமெரிக்காவில் முஸ்லீம்கள் நம் தேவாலயங்களை மசூதிகளாக மாற்றிவரும் பரிதாப நிலை உருவாகியுள்ளது. "மனுமகன் வரும் போது உலகில் விசுவாசத்தை காண்பாரோ?” (லூக் 18:8) என்ற இறைவாக்கு நிறைவேறி வருகிறது.

கீழ்த்திசை நாடுகளிலும், ஆசியாவிலும் திருப்பலிக்கு செல்லும் கூட்டத்தைவிட பிற பிரிவினை சபை நற்செய்திக் கூட்டங்களுக்குப் போகும் கூட்டம் அதிகரித்து வருவது நாம் அறிந்ததே! பலர் கத்தோலிக்க சபையை விட்டுப் பிரிவினை சபைகளுக்குச் சென்றுவிட்டனர். எனவே தான் இன்று நாம் நற்கருணைப் படிப்பினைக்கும் திருப்பலி விளக்க உரைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இன்று புனிதர்களின் (Dulia) வழிபாட்டிற்கும். தேர்த் திருவிழா கொண்டாட்டங்களுக்கும் கொடுக்கும் முக்கியத்து வத்தைவிட நற்கருணை நாதருக்கு கொடுக்க வேண்டிய (Latria) ஆராதனையும், துதி மகிமையும் கொடுக்க தவறினால், நம் பாமர மக்களின் விசுவாசம் ஆழமில்லாத, உறுதியில்லாத மேலோட்டமான விசுவாசமாய் மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

இன்று கத்தோலிக்கத் திருச்சபையை அழிக்க சாத்தான் செய்யும் சதித்திட்டம். “நிரந்தரமான திருப்பலியை" (Perpetual Sacrifice) அழிப்பதே! என்று வசூலா ரைடன் (Vassula Ryden) என்ற அம்மையார் வழியாக இயேசு எச்சரித்துள்ளார். மேலும், "எப்போது கத்தோலிக்கச் சபையும், கிரீக் ஆர்த்தடக்ஸ் சபையும், புராடஸ்டான்ட் சபையும் ஒரே நாளில் உயிர்ப்பு விழாவைக் கொண்டாடி, ஒரே நற்கருணைப் பலியில் பங்கு கொள்கிறார்களோ, அப்பொழுதுதான், இயேசு மன்றாடியது போல், ஒரே மந்தையும், ஒரே ஆயரும் என்ற ஒற்றுமை ஏற்படும் (யோ 10:16).

ஜெர்மனியில் உள்ள அவுக்ஸ்புர்க் என்ற ஊரில் 31.10.1517ல், மார்டின் லூத்தர் ஏற்புடைமை பற்றிய விசுவாசப் புரட்சி கருத்துக் களை வெளியிட்டபோது தான் கத்தோலிக்க தாய் திருச்சபை இரண்டாக பிளவுபட்டது. 31.10.1999ல் அதே அவுக்ஸ்புர்கில், அகில உலக லூத்தரன் சபையும், கத்தோலிக்க சபையும் ஏற்புடைமை பற்றிய போதனைகளில் கருத்தொன்றித்திருப்பதற்கான உடன் படிக்கையில் கையெழுத்திட்ட பொழுது 482 ஆண்டுகள் நீடித்த பிரிவினைக்கு முற்றுப்புள்ளியிடப்பட்டது. இயேசுவின் விருப்பத்திற் கிணங்க, அகில உலக கிறிஸ்துவ சபைகள் ஒன்றியம் (W.C.C.) கிறிஸ்து உயிர்ப்புத் திருநாளை அனைவரும் ஒரே நாளில் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தனர். மேலும் நற்கருணை ஆராதனை ஆலயங்கள், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா, சாபா சரவாக், இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் எழுப்பப்பட்டு வருகின்றன. இறைமக்களும், துறவிகளும், குருக்களும் நித்திய ஆராதனை செய்து வருவது மிக போற்றுதற் குரியது. "நற்கருணைப் புதுமைகள்" என்ற இந்த நூலும், குறுந்தகடும் கத்தோலிக்கர்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்தும், கிறிஸ்துவ ஒன்றிப்புக்கு உறுதுணையாயிருக்கும் என்றும், மறைக்கல்வி போதனைக்கும் மிகவும் பயன்படும் என்றும் உறுதியாக நம்புகிறேன். 

அருள்தந்தை ஜோனத்தன் கப்புச்சின்