(யோவா 13:1-17) சீடர்களின் பாதங்களைக் கழுவுதல் சிலுவை மரணமும் இயேசுவின் அன்பின் வெளிப்பாடாகும். தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. (யோவா 15:-13) என்ற இயேசு தம் சீடரின் பாதங்களைக் கழுவும் அளவுக்குத் தன்னையே தாழ்த்துகின்றார்.
ஏசாயா கூறினது இயேசுவில் நிறைவேறிற்று. ''இதோ என் ஊழியர் அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன். நான் தேர்ந்து கொண்டவர் அவர். அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது. அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன். அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார்.
உண்மையாகவே நீதியை அவர் நிலைநாட்டுவார்" (எசா 42:1-3). உலகில் வாழ்ந்த தமக்குரியோர் மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள் மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார். (யோவா 13:1) என்பதை நிரூபித்து விட்டார். தான் எப்படி அவர்கள் கால்களைக் கழுவினாரோ அப்படியே சீடர்களும் கழுவ வேண்டும் என்று ஆண்டவரும் தலைவருமான அவரே செய்து காட்டினார்.
பாதம் கழுவும் போது தன்னையே தாழ்த்திய இயேசு சிலுவை மரணம் வரைத் தன்னை தாழ்த்துவார் என்பதை முன்னறிவிக்கிறார். பவுல் திருத்தூதர் கூறுவது போல், "கடவுள் வடிவில் விளங்கிய அவர் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவிலே தோன்றி சாவை ஏற்கும் அளவுக்கு அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்படிந்து தாழ்த்திக் கொண்டார்." (பிலி.2:6-8)
பாதம் கழுவும் இயேசு சீடர்களின் பாவக்கறையைப் போக்கி தன்னுடைய இறையரசில் பங்கும் தன் மகிழ்ச்சியிலும், மகிமையிலும், மரணத்திலும் பங்கு கொள்ளப்போவதை முன் அறிவிக்கிறார். பாவத்தைப் போக்க வந்த இயேசு பாதம் கழுவுதல் மூலம் சீடர்களைப் புனிதப்படுத்தி தான் சிந்தப்போகும் இரத்தத்தின் வழியாக மீட்டுக் கொள்ளப் போகிறார்.
இனி சீடர்கள் சாத்தானுக்கு அடிமையல்ல. இயேசுவுக்கே சொந்தமானவர்கள். இயேசு எப்படி தன்னையே தாழ்த்தி சீடர்களுக்கு பணிவிடை செய்தாரோ அதேபோல் சீடர்களும் ஒருவருக்கொருவர் பணிவிடை செய்ய வேண்டும் என்றும் அவர் தன்னையே வெறுமையாக்கி சீடர்களுக்காக உயிர்தியாகம் செய்தாரோ அவ்விதமே சீடர்களும் ஒருவர் ஒருவருக்கு மரணம் வரை அப்பு செலுத்த வேண்டும் என்று முன் மாதிரிகை காட்டினார்.
நற்கருணை தாழ்ச்சியின் கொடுமுடி ஏனெனில் மனிதனாகப் பிறந்தவர் நற்கருணை வழியாக மனிதரின் ஆன்மீக உணவாக மாறும் அளவுக்கு அவர் தன்னையே வெறுமையாக்கினார்.