இறை இயேசுவின் உண்மை பிரசன்னம்தான் நற்கருணை அருட்சாதனத்தின் அடிப்படை சத்தியம். இது ஒரு விசுவாச மறைபொருள். அதே சமயத்தில் திருத்தூதர்களுடைய சுய அனுபவமும், ஆதித் திருச்சபையின் தனி அனுபவுமாயிருந்தது. இந்த மறைபொருளை கத்தோலிக்கத் திருச்சபை என்றும் உறுதியாக போதித்து வந்துள்ளது. நற்கருணை நம் ஐம்புலனுக்கும், ஆறறிவுக்கும் அப்பாற்பட்ட சத்தியமாயிருப்பின் விசுவாச ஒளியிலே தூய ஆவியின் துணையோடு ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.
(a) பழைய ஏற்பாட்டில் இறை பிரசன்னம்
இஸ்ராயேல் மக்கள் உண்மையான யாவேயின் பிரசன்னம் வான் வீட்டில் உள்ளது என்றும் அவர் ஒரு மறைந்த ஐம்புலனுக்கும் மனித அறிவுக்கும் அப்பாற்பட்டவர் என்றும் நம்பினர் (வி.ப.3:6; 20:19; 33:20) அதே வேளையில் யாவேயின் இரக்கத்தினால் அவருடைய அன்பையும் அதிசிய பிரசன்னத்தையும் அனுபவ ரீதியாக உணர முடியும் என்று நம்பினர் (இ.ச. 12:5-11: ஏசா. 18:7 ஏரேமி. 7:12; எசேக். 7:10-14) யாவே, அவர்கள் மத்தியில் பல்வேறு விதத்தில் பிரசன்னமாயிருந்ததை உணர்ந்தார்கள்.
1.நெருங்கிய உடனடி பிரசன்னம்
யாவே ஆதாம் ஏவாளுக்கு மிக நெருக்கமாகவும், நேரடித் தொடர்புள்ளவராகவும் ஏதேன் தோட்டத்தில் உலாவி வந்தவராகவும் சித்தரிக்கப்படுகிறார் (தொ.நூல். 3:8-13)
2.மூதாதையர் வழியாக இறைப்பிரசன்னம்
யாவே அபிரகாம், யாக்கோபு, ஈசாக்கு போன்ற மூதாதையருக்கு நேரடியாகக் காட்சியளித்தார். அவருடைய கூடாரங்களில் தங்கினார். அவர்கள் அங்கு பீடத்தை எழுப்பிப் பலி செலுத்தினார்கள் (தொ.நூ.12:6-9; 18:21; 26:23-25; 28:10-22).
3.யாவே, மோசேயிக்கு காட்டிய பிரசன்னம்
நெருப்பால் எரிந்துகொண்டிருந்த முட்புதரின் நடுவிலிருந்து யாவே மோசேக்குக் காட்சி அளித்தார். "உங்கள் மூதாதையரின் கடவுள் அபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே என்றார்(வி.ப.3:36) அதேபோல் யோசுவாவிடம் நேரடியாகத் தோன்றி, "மோசேயிடம் நான் இருந்தது போல் உன்னோடு இருப்பேன். உன்னைக் கை நெகிழ விட மாட்டேன். கைவிடவுமாட்டேன் வீறுகொள். துணிந்து நில்" என்று கூறித் தன் உடனிருப்பை வெளிப்படுத்தினார்.
4. எங்கும் இருக்கும் இறைபிரசன்னம்
மோசேக்கு தான் யார் என்று வெளிப்படுத்திய யாவே, 'இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே" என்று தான் எங்கும் பிரசன்னமாயிருப்பவர் என்று அறிவித்தார் (வி.ப.3:14)
ஏசாயா வழியாகவே தன் உடனிருப்பை வெளிப்படுத்துகிறார். "நீயே, இஸ்ரயேலே! என் அடியவனே! நான் தெரிந்தெடுத்த யாக்கோபே உலகின் எல்லைகளின்று உன்னை அழைத்து வந்தேன். அஞ்சாதே! நான் உன்னுடன் இருக்கிறேன். கலங்காதே! நான் உன் கடவுள். நான் உனக்கு வலிமை அளிப்பேன். உதவி செய்வேன். என் நீதியில் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன்." (ஏசா. 41:9-10)
5.மேகத்தில் யாவே பிரசன்னம்
மோசே சீனாய் மலை மேல் ஏறிச்செல்ல ஒரு மேகம் மலையை மூடிற்று. ஆண்டவரின் மாட்சியின் காட்சி பற்றி எரியும் நெருப்பு போன்று இஸ்ராயேல் மக்களின் கண்களுக்குத் தெரிந்தது (வி.ப.24:15-17; 29:24) " உம் மாட்சிமை எனக்குக் காட்டும்படி வேண்டுகிறேன்" என்று மோசே கூற, என் நிறை அழகை உன் முன் கடந்து போகச் செய்து என் முகத்தையோ என்னால் பார்க் இயலாது ஏனெனில் என்னைப் பார்த்த எவரும் உயிரோடிருக்க முடியாது" என்றார் (வி.ப.33:15-17) யாவே ஐம்புலன்களுக்கும், அறிவுக்கும் எட்டாதவராயினும் மேகத்தின் மூலமாகவும் தன் பிரசன்னத்தை வெளிப்படுத்தினார் (லேவி. 9:23;
6.இறைவாக்கினர் அரசர்கள் வழியாக பிரசன்னம்
ஆடு மேய்த்த சிறுவன் தாவீது பிலிஸ்திய வீரனான கோலியாத்தை ஒரே கல்லால் கொன்று வீழ்த்தி வெற்றி பெறும்படி செய்தார் யாவே. (1சாமு. 12:1-15) தானியேல் இறைவாக்கினால் சூசன்னாவுக்கு நீதி வழங்கி மாசற்றவறைக் காப்பாற்றினார் யாவே (தானி. (இ) 2:42-60).
7.சீனாய் மலையில் உடன்படிக்கை பிரசன்னம்
இஸ்ராயேல் மக்களுடன் யாவே உடன்படிக்கை செய்யும்போது மோசே மட்டும் ஆண்டவர் பிரசன்னத்திற்கு அனுமதிக்கப்பட்டார். உடன்படிக்கை செய்த பிறகு ஆரோன், நாதாபு, அபிகூ எழுபது பெரியோர்களும் சீனாய் மலைக்கும் ஏறிச் சென்று யாவேயைக் கண்டனர். மகிழ்ச்சியால் உண்டு குடித்தனர் (வி.ப.24:9-11).
8. சந்திப்புக் கூடாரத்தில் இறைபிரசன்னம்
மோசே சந்திப்புக் கூடாரத்தில் நுழைந்ததும் மேகத்தூண் இறங்கி வந்து கூடார நூழைவாயிலில் நின்று கொள்ளும். அப்போது கடவுள் மோசேயுடன் நேருக்குநேர் பேசுவார் (வி.ப.33:9)
9. உடன்படிக்கை பேழையில் பிரசன்னம்
யாவே மேசேயிக்குக் கட்டளையிட்டபடி அவர் உடன்படிக்கைப் பேழையைச் செய்தார். பேழையினுள் உடன்படிக்கை கற்களை வைத்தார். அங்கே நான் உன்னைச் சந்திப்பேன். உடன்படிக்கை பேழைக்கு மேல் அமைந்த இரக்கத்தின் இருக்கையில் இரு கெருபுகள் நடுவிலிருந்து நான் உன்னோடு பேசி இஸ்ராயேல் மக்களுக்கான கட்டளைகள் அனைத்தையும் உனக்குக் கொடுப்பேன் என்றார் யாவே (வி.ப. 25:21-22)ம:
10. எருசலேம் ஆலயத்தில் இறைபிரசன்னம்
இறைவாக்கினர்கள் யாவே எருசலேம் ஆலயத்திலும் சியோன் மலையிலும் இறைவன் பிரசன்னமாய் இருப்பதை எடுத்துக் கூறினர். என் உறைவிடத்தை உங்கள் நடுவில் நிறுவுவேன். நான் உங்களை வெறுப்பதில்லை உங்கள் நடுவே உலாவுவேன். நானே உங்கள் கடவுள். நீங்கள் என் மக்கள்" (லேவி.26:11-12) படைகளின் ஆண்டவர் சீயோன் மலையில் குடிகொண்டிருக் கிறார்(ஏசா.8:18) சீயோனிலிருந்து ஆண்டவர் கர்சனை செய்கிறார். எருசலேமிலிருந்து அவர் முழங்குகிறார் (ஆமொ.1:2) "புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம் ஏனெனில் சீயோனிலிருந்து திருச்சட்டம் வெளிப்படும் எருசலேமிலிருந்து ஆண்டவரின் வாக்கு புறப்படும் (மீக்கா.4:2).
11. யாவேயின் நிலைப்பெற்ற பிரசன்னம்
யாவேயின் நிரந்தரமான பிரசன்னம் அவர் ஏகமகன் இயேசு கிறிஸ்துவில் வெளிப்பட்டது. "ஆண்டவர் தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ கருவுற்றிருக்கும் கன்னி ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார் அக்குழந்தைக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவர்" (ஏசா.7:14). இம்மானுவேல் என்றால் கடவுள் நம்மோடு (மத்.1:23) இருக்கிறார் என்று பொருள். "என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்கத் தந்தையை எங்களுக்குக் காட்டும் என்று எப்படி கேட்கலாம்! நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்ப வில்லையா?" என்றார் இயேசு. (யோவா. 14:9-10) "நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்" (யோவா. 10:30).