அசிசி பிரான்சிஸ் சபை மடத்தில் ஒரு புதுமை 1560இல் நடந்தது. மோரோவால்லே என்ற இடத்தில் சகோ. ஆஞ்சலோ பிளாசி நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் போது ஏப்ரல் 17, 1560இல் இரவு இரண்டு மணிக்கு வெடி சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தார்.
ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது புனித பர்தோலோமையோ கோயில் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டு ஓடிப்போய் மற்ற துறவிகளிடம் சொன்னார்.
அனைவரும் ஓடிவந்து ஏழு மணிநேரம் போராடித் தீயை அணைத்தனர்.
மறுநாள் எரிந்து போன கோயிலைச் சுத்தம் செய்யத் தொடங்கினர்.
அருட்திரு பப்திஸ்தா டா அஸ்கோலி என்ற துறவி பலிபீடத்திலிருந்த பெரிய கல்லைப் புரட்டியபோது, சுவற்றின் ஒரு பொந்திலே நற்கருணை சிமிழைக் கண்டு அதிர்ச்சியுற்றார்.
அதுவும் தீயினால் கருகியிருந்தது.
சிமிழை மெதுவாகத் திறந்தார். என்ன ஆச்சரியம் அதில் வைக்கப்பட்டிருந்த நற்கருணை மட்டும் கொஞ்சமும் அழியாமல் அப்படியே இருந்ததைக் கண்டு வியப்புற்றார்.
அவர் கூப்பிட்ட சத்தத்தைக் கேட்டு எல்லோரும் ஓடிவந்து புதுமையாகக் காப்பாற்றப்பட்ட நற்கருணை நாதரைக் கண்டு, பக்தியுடன் ஆராதித்தனர்.
மூன்று நாள் தொடர் திருவிழிப்பு ஆராதனை நடந்தது.
பிரான்சிஸ்கன் சபை மாநிலத் தலைவர் அருட்திரு எவாஞ்சலிஸ்தா தா மோரே தெ ஆல்பா அங்கு வந்து, நற்கருணையை ஒரு தங்கப் பேழையில் வைத்தார்.
திருத்தந்தை நான்காம் பயஸ், பர்டினோரோ ஆயர் லூடோவிகோடி ஏவார்லியை உடனே மோரோவில்லேக்கு அனுப்பி விசாரணை நடத்தினார்.
உண்மையை அறிந்த பின்பு திருத்தந்தை நான்காம் பயஸ், "புனித ரோமன் கத்தோலிக்க ஆலயம்" (Holy Roman Church 1560- Papal Bull) என்ற வத்திக்கான் கோப்பை 1560இல் எழுதினார்.
அந்தக் கோப்பில் தீ விபத்து நடந்ததையும், (ஏப்ரல் 17-27, 1560) அதில் புதுமையாக காப்பாற்றப்பட்ட நற்கருணைக்காகத் திருவிழா கொண்டாட அனுமதி அளித்துள்ளார்.
புனித பர்தோலோமேயா கோயிலில், நற்கருணை ஸ்தாபகம் செய்து ஆராதனை நடத்தப்படுகிறது.
அந்தக் கண்ணாடிப் பாத்திரத்தையும், சிமிழையும் இன்றும் காணலாம்.