பொன்ஃபெராதா 1533

ஜுவான் தெ பெனவான்த்தே (JUAN DE BENAVENTE) என்ற பக்தியுள்ள கத்தோலிக்கர், ஸ்பெயின் நாட்டில் பொன்ஃபெராதா என்ற ஊரில் தன் மனைவியோடு வசித்து வந்தார் (Ponferrada, Spain). 

மாலை வேளையில் மரியன்னை பங்கு கோயிலுக்குப் போய் ஜெபிப்பது வழக்கம். ஒருநாள் பேராசையால் தூண்டப்பட்டு, மரத்தால் செய்யப்பட்ட நற்கருணை பேழையையும், அதில் உள்ள வெள்ளிப்பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த நற்கருணையையும் எடுத்து சில் ஆற்றில் எறிந்து விடச் சென்றான். 

ஆனால், ஆற்றுக்குள் அந்த நற்கருணைப் பெட்டியைத் தள்ள முடியாமல் அது திடீரென்று மிக பாரமாக மாறிவிட்டது. எனவே, அவன் மீண்டும் தன் வீட்டிற்கு வந்து, மனைவிக்குத் தெரியாமல் எல்லாவற்றையும் மறைத்து வைத்துவிட்டான். 

இரவில் நற்கருணை பேழையிலிருந்து மிகப் பிரகாசமான ஒளி வந்து அறையை நிரப்பிற்று. தன் மனைவிக்கு இது தெரியா வண்ணம், அன்று இரவே பேழையை எடுத்து அரேனால் நிலம் (ARENAL FIELD) என்று மக்களால் அழைக்கப்படும் நிலத்தில் நற்கருணைப் பேழையையும், நற்கருணைப் பாத்திரத்தையும் எறிந்து விட்டான். 

நற்கருணைப் பேழையைத் தேடிய மக்கள் அது அரேனால் நிலத்தில் கிடப்பதை அறிந்து மிகவும் வருத்தமுற்றனர். அந்த நிலத்தின் உடமையாளர் தியாகோ நூனஸ் தெலோசாதா (DIEGO NUNEZ DE LOSADA) என்பவர் திருநாட்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்துவார். 

அங்குக் கூடிய மக்கள் இரவில் நற்கருணைப் பேழையிலிருந்து பிரகாசமான ஒளி வருவதையும்; பகலிலே புறாக்கள் கூட்டமாக அதை சுற்றி வருவதையும் கண்டு தியாகோவிடம் சொல்ல அவனும் தன்னால் முடிந்தவரை புறாக்கூட்டத்தை விரட்டப் பார்த்தான். ஆனால் முடியவில்லை. 

பங்குக் குருவுக்கு செய்தி எட்டியது. உடனே பங்கு மக்கள் ஒன்று சேர்ந்து நற்கருணைப் பேழையை ஆடம்பரமாக ஊருக்குக் கொண்டு வந்தனர். ஜுவான் தெ பெனவான்தே மனம்மாறி பாவ அறிக்கை செய்தான். 

1570இல் நற்கருணைப் பேழை கண்டெடுத்த இடத்தில் சிற்றாலயம் கட்டப்பட்டது. ஆண்டுதோறும் இயேசுவின் திருஉடல் திருஇரத்த திருநாளில் நற்கருணைப் பவனிச் சிறப்பாக நடக்கிறது. 

நற்கருணைப் பாத்திரத்தில் உள்ள நற்கருணை இன்றும் அழியாமல் இருப்பதே மிகப்பெரிய புதுமை!