மீட்பராகிய மெசியா வரும் போது திருவிருந்து அளிப்பார் என்று இஸ்ராயேல் மக்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். வி.ப.16:1-36 ன்படி இஸ்ராயேல் மக்கள் வனாந்தரத்திலே 40 ஆண்டுகள் சுற்றித்திரிந்த போது யாவே அவர்கள் பசியைப்போக்க விண்ணிலிருந்து மன்னாவையும், தாகத்தைத் தணிக்கத் தண்ணீரையும் கொடுத்தார் என்று காண்கிறோம். மேலும் சீனாய் மலையில் உடன்படிக்கை செய்து கொண்டபோது மோசேயும், ஆரோனும், நாதாபு, அடிகூ ஆகியோரும் இஸ்ராயேலின் 70 பெரியோர்களும் கடவுளைக் கண்டு உண்டு குடித்தனர்(வி.ப. 24:9-10) என்று படிக்கின்றோம். அது போலவே இஸ்ராயேல் மக்கள் பலி செலுத்திய பொழுது பலி உணவை உண்பது இறைவனோடு ஒன்றிப்பது என்று கருதினர். (தொ.நூ. 31:54; வி.ப.18:12:1; சாமு 9:12-14 ஓசேப். 8:13; ஆமோ. 2:8).
பழைய ஏற்பாட்டில் மெசியாவின் காலத்தில் திருவிருந்து மிகப்பெரிய ஆசீர்வாதமாக இருக்கும் என்று பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. திருப்பாடல் ஆசிரியர் செல்வரும், எளியோரும் திருவிருந்தில் பங்கெடுப்பர் என்று எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர். ஆண்டவரை நாடுவோர் அவரை புகழ்வர் என்று (தி.பா. 22:26) கூறுகிறார். ஏசாயா இறைவாக்கினர். "தாகமாய் இருப்பவர்களே நீங்கள் அனைவரும் நீர் நிலைகளுக்கு வாருங்கள். கையில் பணமில்லாதவர்களே நீங்களும் வாருங்கள் தானியத்தை வாங்கி உண்ணுங்கள். வாருங்கள் காசு பணமின்றி திராட்சை இரசமும், பாலும் பருகுங்கள். (ஏசா 55:1) என்று கூறுகிறார். இனிமைமிகு பாடல், "தோழர்களே உண்ணுங்கள்; அன்பர்களே போதையேறப் பருகுங்கள்" என்று அழைப்பு விடுக்கிறது (இ.பாடல் 5:1). நீதிமொழி : "வாருங்கள் நான் தரும் உணவை உண்ணுங் கள் நான் கலந்து வைத்துள்ள திராட்சை இரசத்தைப் பருகுங்கள்" என்று திருவிருந்துக்கு அழைக்கிறது (நீதி 9:5).
இந்தத் திருவிருந்து ஆண்டவர் அளிக்கும் மாபெரும் விருந்தாகும். படைகளின் ஆண்டவர் மக்களினங்கள் அனை வருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார், அதில் சுவைமிக்க பண்டங்களும், பழரசங்களும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும் வடிகட்டி பக்குவபடுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படும் (ஏசா 25:6). இது ஒரு திருமண விருந்தாகும் (இ. பா. 5:1). இறைவனுக்கும், இறைசமூகத்திற்கும் இடையே ஏற்படும் உடன்படிக்கையின் விருந்தாகும். இது இறைமகனான மெசியா அளிக்கும் விருந்து. எல்லா இனத்தாரும், எல்லா நாட்டினரும், எல்லா காலத்திலும் வழங்கப்படும் ஆன்மீக விருந்தாகும் என்று (E.J.Kilmartin) கில்மார்டின் என்ற இறை வல்லுனர் கூறுகிறார். இந்தத் திருமண விருந்து இயேசு மெசியாக் காலத்தில் நிறைவேறியது என்கிறார் டென்னிஸ் சிமித் என்ற புகழ் பெற்ற வல்லுனர். புதிய ஏற்பாட்டில் பல இடங்களில் மெசியாவின் திருவிருந்து பற்றி நாம் காணலாம். (மத் 14:13-21; மாற். 6:32- 44; லூக். 9:10-17; யோவா. 6:1-15; மத் 15:32-39; யோவா. 2:1- 11) இறை அரசை ஒரு மாபெறும் திருமணவிருந்துக்கு உவமையாக ஒப்பிட்டு இயேசு பேசுவதை மத்தேயு நற்செய்தி கூறுகிறது. (மத் 22:1-10) இந்த திருமணவிருந்து மெசியா யூதர்களுக்கும் யூதர் அல்லாதவர்களுக்கும் அளிக்கும் நற்கருணை விருந்தாகும். (லூக் 13:38-39; 14:12-14) புதிய ஏற்பாட்டில் நடைபெறும் அப்ப இரச திருவிருந்து இறைமகன் இயேசுவின் இறுதி இராவுணவை அல்லது அகாப்பே (Agape) என்னும் அன்பிய விருந்தை குறிப்பதாகவே பலரும் சொல்கின்றனர்.