பெதியானி குடும்பத்தார் கோட்டையில் உள்ள சிற்றாலயத்தில் 1411இல் குருவானவர் ஒருவர் திருப்பலி நிறைவேற்றினார். இரசத்தைக் கிண்ணத்தில் எடுத்து, “இது என் இரத்தம் என்ற வசீகர வார்த்தையை உச்சரித்தபோது, இது உண்மையாகவே இயேசுவின் திருஇரத்தமாக மாறிவிட்டது.
அதிர்ச்சியுற்ற குரு, திருஇரத்தத்தை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பத்திரப்படுத்தி பீடத்திற்குப் பின்னால் ஒருவருக்கும் தெரியாமல் சுவற்றில் மறைத்து வைத்துவிட்டார். இந்த வேலையைச் செய்த கட்டுமான பணியாளரிடம், இதை யாருக்கும் சொல்லக்கூடாது என்று கட்டளையும் கொடுத்துவிட்டார்.
குருவானவர் இந்தப் புதுமையை மரணம் வரை யாரிடமும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் அவர் மரிக்கும்போது இந்த உண்மையை சொல்லிவிட்டார். உடனே மக்கள் லூட்பெர்க் கோயிலுக்கு திரண்டு வந்தனர் (Ludbreg, Croatia). இதை அறிந்த திருத்தந்தை அந்தத் திருஇரத்தமுள்ள பாத்திரத்தை உரோமைக்குக் கொண்டு வரும்படி கட்டளையிட்டார்.
ஆனால் மக்கள் திருயாத்திரையாக பெதியானி குடும்பத்தார் சிற்றாலயத்திற்குத் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தனர். ஆகவே, திருத்தந்தை 2ஆம் ஜூலியுஸ், ஒரு விசாரணைக் குழுவை ஏற்படுத்தி, லூட்பெர்க்கில் நடந்த புதுமையைப் பற்றி ஆராய்ச்சி செய்யும்படி பணித்தார்.
சிற்றாலயத்தில் வந்து ஜெபிக்கும்போதெல்லாம் பற்பல புதுமைகளும், அற்புதங்களும் நடந்ததாக பலர் சாட்சியம் கூறினர். திருத்தந்தை பத்தாம் லியோ, திருப்பண்டம் (திருஇரத்தம்) வணக்கத்துக்குரியதே என்று ஏப்ரல் 13, 1513ல் எழுதிய ஆவணத்தில் கையொப்பமிட்டார். அவரே பலமுறை திருப்பண்டத்தை உரோமாபுரி தெருக்களில் பவனியாக எடுத்துச் சென்றார்.
பிறகு குரோசியாவுக்கே அத்திருப்பண்டம் திருப்பி அனுப்பப்பட்டது. 1739ல் குரோசியாவில் ஒரு கொள்ளை நோய் மிக வேகமாக பரவியது. வாராடின் என்ற ஊரில் குரோசியா சட்ட சபையினர் டிசம்பர் 15, 1739இல் ஒன்றுகூடி, லூட்பெர்க்கில் ஒரு ஆலயம் எழுப்பப்படும் என்று நேர்ச்சி செய்தார். கொள்ளை நோயும் மறைந்து ஒழிந்தது.
குரோசியாவுக்கு முழு சுதந்திரம் கிடைத்த பிறகே, 1994இல் அங்கு ஒர் ஆலயம் கட்டப்பட்டது. அந்த ஆலயத்தில் மரிஜான் ஜாகுபின் என்ற ஓவியர், இயேசுவின் இறுதி இராவுணவு ஓவியத்தை வரைந்தார். அதில் இயேசுவின் சீடர்களுக்குப் பதிலாக, அருளாளர் ஈவான்மெர்ஸ் போன்ற குரோசியா புனிதர்களின் படத்தை வரைந்தார்.
இந்த இராவுணவின்போது, இயேசு லூட்பெர்க் திரு கிண்ணத்தை திருக்கரத்தில் ஏந்தியிருப்பதாக ஓவியம் தீட்டியுள்ளார். 2005இல் உரோமையில் நடைபெற்ற ஆயர்களின் திரு அவையில் 18 புகழ்பெற்ற நற்கருணைப் புனிதர்களின் கூட்டத்தில் அருளாளர் வான்மெர்ஸ் பெயரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.