பாஸ்கா விருந்தும், இறுதி இராஉணவும்

முதலில் பாஸ்கா வீடுகளில் வீட்டுத்தலைவர் தலைமையில் நடந்தது. பிற்காலத்தில் பாஸ்கா திருவிழா எருசலேமில் பாஸ்கா பலியும், பலி விருந்தும், விருத்தசேதனம் செய்துகொண்ட யூதர்களுக்கு மட்டும் கொண்டாடப்பட்டது. 

அந்தப்பலி கொண்டாட்டத்தில் முக்கியமானவை ஒரு வயதுள்ள ஆட்டுக்குட்டி பலியாக வெட்டி உண்ணப்பட்டது. ஆடு முழுமையாக நெருப்பில் சுடப்பட்டது. உண்ணாத பாகங்கள் எரிக்கப்பட்டன. உண்பவர்கள் நின்று கொண்டு பிரயாணத்திற்கு ஆயத்தமாக உடுத்தியிருப்பர். 

எகிப்து நாட்டின் மனிதர் தொடங்கி விலங்கு வரை அனைத்து ஆண்பால் தலைப் பிறப்பையும் வானதூதர் நள்ளிரவில் சாகடித்ததால் அதற்குத் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஆட்டு இரத்தத்தைக் கதவின் நிலைகளில் பூசினர். (வி.ப. 12:3-20) ஆட்டுக்குட்டி தூயகத்தில் தான் பலியிடப்பட வேண்டும். பலியிட்ட இறைச்சி யையும் தூயகத்தில் தான் உண்ண வேண்டும். (எண். 28:16; எசேக் 45:21; இ.ச. 16:1-5). 

இயேசுவின் இறுதி இராஉணவின் போது தான் பாஸ்கா விழா கொண்டாடப்பட்டது என ஒத்தமை நற்செய்தி கூறுகின்றது. (மத். 26:17; மாற் 14:12,16; லூக் 22:7,11,12,15) பாஸ்கா திருவிழா நிசான் மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்பட்ட நாளில் தான் இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். இறுதி இராஉணவு பாஸ்கா இரவில் ஆயத்தம் செய்யப்பட்டது. எருசலேமில் நடைபெற்றது. புளியாத அப்பத்தைப் புதிய கருத்துடன் இயேசு பிட்டு உண்ணும்படி சீடர்களுக்கு வழங்கினார். திராட்சை இரசத்தையும் குடித்தனர். 

இறுதியாக ஹல்லல் என்ற இறை புகழ் பாடலுடன் பாஸ்கா நிறைவேறியது. எனவே இயேசுவின் இறுதி இராவுணவு புதிய பாஸ்கா என்றும் கூறலாம். ஏனெனில் இயேசு இங்கு பலியாகும் ஆட்டுக்குட்டியாகவும் அவரே பலி செலுத்தும் குருவாகவும் தன் மரணத்தினாலும் உயிர்ப்பினாலும் அனை வருக்கும் மீட்பு கொடுப்பவராகவும் இருக்கிறார். 

பாவம் சுமந்த பாஸ்கா செம்மறி யூதர்களுக்கு மட்டுமே மீட்பு கொண்டு வந்தது. ஆனால், உலகின் பாவம் போக்கும் செம்மறியான இயேசு உலகமாந்தர் அனைவருக்கும் மீட்பின் காரணமானார்.