டூரின் நகரில் நடந்த புதுமைகள் 1453

இத்தாலியில் டூரின் நகரில் உள்ள நற்கருணை ஆண்டவர் பேராலயத்தில் 1453இல் ஒரு புதுமை நடந்தது (Turin, Italy). அந்தப் பேராலயத்தில் ஒரு கிராதி (Railing) உண்டு. அங்குக் கீழ்க்கண்ட நிகழ்வு கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. “இங்கு தான் நற்கருணை  நாதர் தெண்டனிட்டு கிடந்தார். இங்கு தான் பையிலிருந்து விழுந்த நற்கருணை மேலே உயர்ந்தது. ஆயரின் திருப்பலி பாத்திரத்தில் இறங்கியது. இந்த இடம்தான் புதுமையால் புனிதமடைந்தது. இங்கே மண்டியிட்டுச் ஜெபிக்க மறவாதீர்கள்” (ஜுன்6, 1453)

எக்சில்லஸ் (EXILLES) அருகில் உள்ள அல்தா வால் சூசா (Alta Val Susa) என்ற இடத்தில் ரெனே தெ ஆன்ஜியோ உடைய போர் வீரர்களும், சவாய் லூடோவிக் டியூக்கின் போர் வீரர்களும் சண்டையிட்டனர். இரு போர்வீரர்களும் ஊரைச் சூறையாடினர். சிலர் கோயிலுக்குள் சென்றனர். ஒரு போர்வீரன் நற்கருணைப் பேழையை உடைத்து, நற்கருணையுடன், கதிர்ப்பாத்திரத்தையும் ஒரு பையில் போட்டுக், கழுதை மேல் ஏறி டூரின் நகரை நோக்கிப் புறப்பட்டான். புனித சில்வன்டர் கோயிலின் (முன்னாள் பரிசுத்த ஆவி ஆலயம், இந்நாள் நற்கருணை ஆண்டவர் ஆலயம்) நெடுஞ்சாலையில் கழுதை தடுமாறிக் கீழே விழுந்தது. பையிலிருந்த நற்கருணையுடன் கதிர்பாத்திரம் யாவரும் காணும்படி மேலே உயர்ந்தெழுந்தது. அங்கிருந்த டோன் பர்த்தலோமேயோ கொக்கோலோ (DON BARTHOLOMEW COCCOLO) ரொமாஞ்ஞாநோ மார்க்விஸ் ஆயர் லூடோவிக்கிடம் ஓடிச் சென்றுப் புதுமையை அறிவித்தான். உடனே ஆயரும் சில குருக்களும் நெடுஞ் சாலைக்கு வந்து, தெண்டனிட்டு வணங்கி, “எங்களோடு தங்கும்' என்ற எம்மாவுஸ் மன்றாட்டைச் சொன்னார்கள். இதற்கிடையில் இன்னும் ஒரு புதுமை நடந்தது. நற்கருணைக் கதிர்பாத்திரம் கீழே இறங்கியது. நற்கருணை மட்டும் ஆயர் கையில் பிடித்திருந்த பாத்திரத்தில் வந்து இறங்கியது. 1453இல் புதுமை நடந்த இடத்திலே ஆலயம் கட்டப்பட்டு திருவிழா கொண்டாடப்பட்டது. இதன் கோப்புக்கள் டூரின் நகரில் 1454, 1455, 1456இல் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், 1543, 1653, 1703, 1853 ஆண்டுகளில் கொண்டாடப் பட்ட நூற்றாண்டு விழா கோப்புகளில் பல புதுமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1853இல் அருளாளர் திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் நான்காம் நூற்றாண்டு விழாக் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. அப்போது புனித ஜான் போஸ்கோவும், டோன் ரூவாவும் கலந்து கொண்டனர். 1928இல் 11ஆம் பத்திநாதர் நற்கருணை ஆண்டவர் தேவாலயத்தைப் பேராலயமாக உயர்த்தினார்.

1640இல் கவுண்ட் அர்கோடின் பிரெஞ்சு படை போ நதியைக் கடந்து, கப்புச்சின் சபைக் கோயிலைத் தாக்க வந்தனர். பியர் மரியாடா காம்பியானே என்ற கப்புச்சின் துறவி நடந்த புதுமையைப் பற்றி எழுதியுள்ளார். மே 6, 1640இல் பிரெஞ்சு படை போ நதியைக் கடந்து, கப்புச்சின் மடத்தைத் தாக்கினர். துறவிகளுக்கு எந்த ஆபத்துமில்லை. ஆனால் கோயிலில் நுழைந்து அங்கு அடைக்கலம் புகுந்திருந்த பெரியவர், சிறுவர், ஆண், பெண் யாவரையும் கொன்று போட்டனர். கப்புச்சின் துறவிகள் கெஞ்சியும், அவர்கள் மனமிரங்கவில்லை. துறவிகள் மடத்தில் மக்கள் பாதுகாத்து வைத்திருந்த பொருட்களையும் சூறையாடினர். மேலும், ஒரு போர்வீரன் பீடத்தின் மீது ஏறி நற்கருணைப் பேழையை உடைத்து. நற்கருணையை வெளியே எடுத்து அவமதிப்பு செய்யப்போகும் வேளையில் தீ பிடித்து அவனை எறித்தது. தீயினால் அவன் கருகிச் செத்தான். மற்ற போர் வீரர்கள் ஓடி மறைந்தனர்.