தூய ஆவியாரும் நற்கருணையும்

இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகளில் தூய ஆவியார் திருச்சபையை புனிதப்படுத்தும் ஆவியார் என்று அறிவிக்கப்படுகிறார். "உலகில் ஆற்றும்படி தந்தை மகனிடம் செய்யக்கொடுத்த பணி நிறைவு எய்தியதும் (யோவா. 17:4) திருச்சபையை எந்நாளும் தொடர்ந்து புனிதப்படுத்தவும், கிறிஸ்துவின் வாயிலாக விசுவாசிகள் ஒரே ஆவியானவரில் தந்தையிடும் அணுகும் பேறு பெறவும் (எபே. 2:18) 50- ஆம் நாளிலே தூய ஆவியார் அனுப்பப்பெற்றார்". (திருச்சபை எண்.4).

இவரே வாழ்வின் ஆவியானவர் (யோவா.7:4) சாவிற்கு உட்பட்ட மனிதருடைய உடல்களைக் கிறிஸ்துவில் உயிர்பிக்கும் ஆவியார் (உரோ.2:10-11) பாவத்தால் இறந்தவருக்கு இவர் வழியாகவே தந்தை உயிரளிக்கிறார். (யோவா. 20:19-22) இவரே திருச்சபையிலும் விசுவாசிகளின் இதயங்களிலும் ஆலயமாய்க் கொண்டு குடியிருப்பவர்(1 கொரி. 3:16) அவர்கள் உள்ளத்திலிருந்து பேசி செபிப்பவர்(உரோ.8:26) இவரே நாம் கடவுளின் பிள்ளைகள் என்று சான்று பகருகிறார் (உரோ 8:16) விசுவாசிகளின் உள்ளத்திலே இருந்து அப்பா தந்தாய் என்று கூப்பிடும் தூய ஆவியார் இவரே (கலா 4:6) நிறை உண்மையை நோக்கி திருச்சபையை வழி நடத்துகிறார் (யோவா. 16:13).

தூய ஆவியார் அருள் அடையாளங்களின் வழியாக நம்மை புனிதப்படுத்துகிறார். எல்லா அருள் அடையாளங்களுக்கும் நுழைவாயிலாக இருப்பது திருமுழுக்கு. இதன் வழியாகவே மனிதனை ஜென்மப் பாவத்திலிருந்து விடுதலை ஆக்கி கடவுளுடைய பிள்ளையாக மாற்றுகிறார். திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரையும் உறுதிபூசுதல் அருள் அடையாளத்தின் வழியாக திடப்படுத்துகிறார் தூய ஆவியார். தூய ஆவியாரின் துணையோடு அருள் வாழ்விலே உறுதிபெற்றுப் புத்துணர்வும் மறுமலர்சியும் பெற்று சமுதாயத்தில் தன்னுடைய கடமையும் தன் பணியையும் ஆற்றும்படி தூய ஆவியாரால் திருநிலைப் படுத்தப்படுகிறார்.

திருப்பலியின் போது வார்த்தையும் நற்கருணை வழிபாடும் இடம் பெற்றுள்ளன. இரண்டும் தூய ஆவியாரின் செயலே. எப்படி வார்த்தை மனுவுருவாகும்படி செய்தாரோ அப்படியே அப்பத்தையும் இரசத்தையும் இயேசுவின் திருவுடலாகவும், திருஇரத்தமாகவும் மாற்றுபவர் தூய ஆவியாரே. திருப்பலி நிறைவேற்றும் குரு வானகத் தந்தையே நீர் மெய்யாகவே தூயவர். புனிதத்திற் கெல்லாம் ஊற்று. ஆகவே உம்முடைய தூய ஆவியாரைப் பொழிந்து இக்காணிக்கைகளைப் புனிதப்படுத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்" என்று ஜெபிக்கிறார். 

நற்கருணையில் நாம் இயேசுவோடு ஓர் உடல் ஓர் உயிர் ஆகின்றோம். இயேசுவின் மறை உடலாகிய திருச்சபையைக் கட்டி எழுப்புவதும் தூய ஆவியாரே. ஒப்புரவு அருள் அடையாளத்தின் வழியாக வானகத் தந்தையோடும் (1 யோவா. 4:19) மரணத்தால் நம்மை மீட்ட கிறிஸ்துவோடும் (கலா. 2:20) நம்மீது ஏராளமாய் அருளைப் பொழியும் சகோதரிகளோடும் ஒப்புரவாகிறோம். திருப்பலியை நிறைவேற்றும் குருவைத் தூய ஆவியாரே திருநிலைப் படுத்துகிறார். இதை ஆயர் வழியாகச் செய்கிறார். குருத்துவம் என்னும் அருள் அடையாளத்தின் ஆற்றலால் நற்செய்தியை போதிக்கவும், விசுவாசிகளுக்கு எல்லா அருள் அடையாளங்களை வழங்கவும், ஆயரின் மேய்ப்புப் பணியை தொடர்ந்தாற்றவும் அதிகாரம் பெறுகின்றார் குருவானவர். 

திருமணச்சடங்கில் குருவானவர், "தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் நான் உங்களை கணவன் மனைவியாக இணைக்கிறேன்" என்று ஜெபிக்கின்றார். தம்பதிகளைத் தூய ஆவியார் இறை அன்பால் பிணைக்கிறார். அவர்கள் ஓர் உடல் ஓர் உயிராக இணைகின்றார். நோயிதல் பூசுதல் அருள் அடையாளத்தின் வழியாகக் குரு பாவத்தை மன்னித்து இறுதி உணவாகிய நற்கருணையை அளிக்கிறார். இது வேதனையைத் தணிக்கிறது, பாவத்தை ஒழிக்கிறது நோயை குணமாக்குகிறது. சோதனையை வெல்ல சக்தி தருகிறது தருகிறது மரணத்தை ஏற்றுக்கொள்ள மனதிடத்தையும், இறைவனைச் சந்திக்க நம்பிக்கையையும் அளிக்கின்றது.